ராஜபக்சக்களுக்கு பாவமன்னிப்பு வழங்க கர்தினால் மல்கம் றஞ்சித் விரும்புவது ஏன்? பனங்காட்டான்


2010ல் மல்கம் றஞ்சித்தின் ஏற்பாட்டில் இத்தாலிக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு ஒரு கர்தினால் வேண்டுமென கேட்டுக் கொண்டதால் மல்கம் றஞ்சித் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2019ல் பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பதவியிழந்திருந்த மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு கர்தினால் மல்கம் றஞ்சித்தே காரணமாகவிருந்தார். அவ்வேளை மகிந்த முன்னிலையில் பொதுப்பணிக்கென பாப்பரசரிடம் அவரால் கையளிக்கப்பட்ட சுமார் 9 மில்லியன் ரூபாவை பாப்பரசர் ஏற்க மறுத்ததன் காரணம் என்ன? 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வு கடந்த 12ம் திகதி ஆரம்பமானபோது எதிர்பார்க்கப்பட்டவாறு ஓர் அறிக்கையுடன் எல்லாம் சப்பென்று போனதே கசப்பான உண்மை. 

46:1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பெரும் நம்பிக்கை கொடுக்கப்பட்டது. 51:1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிப்பொறிமுறை, போர்க்கால ஆவணங்களைத் திரட்டி ஆவணப்படுத்துவதற்கான தனி அலுவலகம் ஒன்று அமைக்கப்படுவது என்று பல முன்னெடுப்புகள் காட்டப்பட்டன. 

இந்த மாதம் ஆரம்பமான 54ம் அமர்வில் பொறுப்புக்கூறலுடன் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது கோரப்பட்டது. ஆனால் சர்வதேச நீதிப்பொறிமுறை என்பது காணாமல் போய்விட்டது. 

முன்னைய அமர்வுகளின் போது ஏட்டிக்குப் போட்டியாக ஜெனிவா சென்ற தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எவரும் இம்முறை செல்லவில்லை. சிலவேளை அமர்வின் இறுதி நாட்களான அக்டோபர் இரண்டாவது வாரத்தில் செல்வார்களோ தெரியாது. இலங்கை அரசாங்கமும் தங்கள் குழுவினரையோ அல்லது வெளிவிவகார அமைச்சரையோ அங்கு அனுப்பவில்லை. இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சுபாசினி அருணதிலக மட்டும் சகலதையும் கையாள அனுமதிக்கப்பட்டார். 

ஜெனிவா கோரும் பொறுப்புக்கூறலை இலங்கை அரசு முழுமையாக நிராகரிக்கிறது என்ற ஒற்றை வரியுடன் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டார். பொறுப்புக்கூறலை ஜெனிவா கூறுவது சந்தேகத்துக்குரிய ஒரு விடயமாகத் தெரிவதாகவும் இவர் சுட்டிக்காட்டினார். முன்னைய இரு தீர்மானங்களையும் இலங்கை முழுமையாக நிராகரிப்பதாகவும், ஜெனிவாவின் எழுத்து மூல அறிக்கைகளையும் பரிந்துரைகளையும்கூட இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இவர் அழுத்திக் கூறினார். 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 51வது அமர்வின்போது பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா உட்பட ஏழு நாடுகளின் அனுசரணையில் 51:1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. 193 அங்கத்துவ நாடுகளில் 37 இதற்கு அனுசரணை வழங்கின. உலகின் ஐந்து பிராந்தியங்களின் வழியான நாற்பத்தேழு நாடுகளுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. 

51:1 வாக்கெடுப்பில் 47 நாடுகளில் 20 நாடுகள் தீர்மானத்தை ஆதாரித்தன. 7 நாடுகள் மட்டும் எதிர்த்து வாக்களித்தன. வாக்களிப்பில் பங்குபற்றிய 27ல் 20 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்ததால் 13 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேறியது. வாக்களிப்பில் பங்குபற்றாத 20 நாடுகளையும் எந்தத் தரப்புக்கும் சேர்த்துக் கொள்ள முடியாது. 

ஆனால், 47 நாடுகளில் 20 மட்டுமே தீர்மானத்தை ஆதரித்தன என்றும், மிகுதி 27 நாடுகளும் இதனை ஆதரிக்கவில்லை என்றும் இலங்கை அரசு கள்ளக்கணக்கு காட்டியது. அதனையே சரியான கணக்கென வலியுறுத்தும் வகையில், 'தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்ட உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளாத பல நாடுகள் இதனை எதிர்த்தன அல்லது வாக்களிப்பைத் தவிர்த்தன" என்று சுபாசினி அருணதிலக தமது உரையில் சுட்டியது இலங்கையின் படுகேவலமான அரசியல் போக்கை வெளிப்படுத்தியது. 

அக்டோபர் 13ம் திகதி முடிவடையும் ஜெனிவா அமர்வில் புதிதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியம் காணப்படவில்லை. இனிவரும் காலங்களில் மனித உரிமை ஆணையாளர்கள் வாய்ப்பாடு வாசிப்பது போன்று இலங்கை பற்றிக் குறிப்பிடுவதுடன் ஷமுற்றும்| என்றாகி விடுமா அல்லது திசைமாறி நடவடிக்கைகள் செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யவேண்டும், விரைவாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இந்தியாவின் பிரதிநிதி மறவாமல் எடுத்துக் கூறுவதற்காகவாவது ஜெனிவா அமர்வு பயன்படுவது சிலவேளை ஏமாந்திருப்பவர்களுக்கு திருப்தியைக் கொடுக்கலாம். 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் - 4 வெளியிட்ட ஆவணம் ஜெனிவா காலத்தில் வெளியிடப்பட்டதால் போலும், 54வது அமர்வு பெருமளவு முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். சனல் -4 தான் இப்போது சூடு பிடித்துள்ள பேச்சுக்களம். ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் பங்குக்கு எதனையும் கூறலாம் என்றாகிவிட்டது. 

முள்ளிவாய்க்கால் பேரினஅழிப்பை வெளிக்கொணர்ந்த சனல் - 4 ஆவணம் வெளியானபோது, அதற்கு சர்வதேச விசாரணை வேண்டுமென தமிழர் தரப்பிலிருந்தே பெருங்குரல்கள் வந்தன. ஜெனிவாவும்கூட இதனை முன்னிலைப்படுத்தியே சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையை கோரியது. அப்போது சிங்களத் தரப்பிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு வந்தது. 

அன்று, அதனை எதிர்த்தவர்கள் இன்று ஈஸ்டர் தாக்குதல் சனல் - 4 ஆவணத்துக்கு சர்வதேச விசாரணை கேட்கின்றனர். தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நீதிப்பொறிமுறையை 46:1 ஜெனிவா தீர்மானம் கோரியபோது அதற்கு இணைஅனுசரணை வழங்கிய நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் அதனை மறுதலித்து நிராகரித்துவிட்டார். இதன் பெயர்தான் நீதி, இதுதான் சட்ட முறைமை என்றவாறு கதை அளக்கப்படுகிறது. 

ஈஸ்டர் தாக்குதலுக்கு நம்பகமான வெளியார் பங்களிப்புடன் விசாரணை தேவையென பலரும் கேட்க, இரண்டு விசாரணைக் குழுக்களை நியமிக்கப் போவதாக ரணில் தெரிவித்தார். அதன்படி ஓய்வு பெற்ற நீதியரசர்; தலைமையில் இரண்டு உறுப்பினர்களையும் இணைத்து ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். அடுத்து, நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் அமைக்கப்படுமென்று தெரிவித்துள்ளார். 

ஒரு விவகாரத்துக்கு சமவேளையில் இரண்டு விசாரணைக் குழுக்கள் என்பது ரணிலின் சமயோசித யுக்தி. இரண்டு குழுக்களும் தனித்தனியாக விசாரித்து கண்டுபிடிப்பவைகளும், பரிந்துரைப்பவைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், ஏறுக்கு மாறாகவுமே அமையும். இதனை எதிர்பார்த்தே இரண்டு குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 

கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்கவென நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றினை வைத்தார். அதன் அறிக்கையும் அவரிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு என்னானது? ஏன் வெளியிடப்படவில்லை? எதற்காக அந்த அறிக்கையை தேடி எடுத்து பகிரங்கப்படுத்த ரணில் விரும்பவில்லை?

அந்த அறிக்கையை வெளியிடுமாறு தொடர்ச்சியாக கர்தினால் மல்கம் றஞ்சித் கேட்டு வந்தார். அரசியலில் பிரச்சனைக்குரியவரான விமல் வீரவன்சவும் அதனைக் கேட்கிறார். அதுபற்றித் தமக்கு எதுவுமே தெரியாததுபோல் மௌனம் சாதிப்பதே ரணிலின் பதில். மாறாக, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான ஆணைக்குழுவை நியமித்துவிட்டு வெளிநாடு பறந்துவிட்டார். 

இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் கர்தினால் மல்கம் றஞ்சித்தின் இரட்டை நிலைப்பாடு. தொடர்ச்சியாக சர்வதேச விசாரணையையும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி வந்த இவர், சனல் - 4 வெளியானதன் பின்னர் தமது சுருதியைக் கீழிறக்கி நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தத் திடீர் மனமாற்றம் எவ்வாறு வந்தது?

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தப்பட்ட விடயங்களில் தை;திரியும் ரணிலும் சம்பந்தப்பட்டிருப்பதாகவே அவர் எண்ணியிருந்ததாகவும், அவர்களை சட்டத்தின் பிடிக்குள் தள்ளிவிடவே உரிய நடவடிக்கைகளை அவர் கேட்டு வந்ததாகவும், ஆனால் குற்றச்சாட்டில் ராஜபக்ச குடும்பம் இருப்பதால் அவர்களைக் காப்பாற்ற அவர் முனைவதாகவும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் ராஜபக்ச - மல்கம் றஞ்சித் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் பகிரங்கமானவை. 

16ம் ஆசீர்வாதப்பர் பாப்பரசராக இருந்தபோது முதலாவது சம்பவம் இடம்பெற்றது. மல்கம் றஞ்சித் அவர்களின் சிபார்சில் மகிந்த ராஜபக்ச 16ம் ஆசீர்வாதிப்பரை இத்தாலியில் சந்திக்க ஏற்பாடானது. இச்சந்திப்பின்போது பாப்பரசர் என்ன கேட்பார், மகிந்த என்ன கேட்க வேண்டும் என்பவை பற்றி மல்கம் றஞ்சித்துக்கும் மகிந்தவுக்கும் இடையே ஒத்திகை இடம்பெற்றது. 

2010ம் ஆண்டு பாப்பரசர் பிரான்சிஸ் பதவியேற்ற பின்னரே மகிந்தவின் இத்தாலிய பயணம் இடம்பெற்றது. பாப்பரசருடனான மரியாதைச் சந்திப்பின் பின்னர், இலங்கைக்கு என்ன செய்யலாம் என்று பாப்பரசர் வினவியபோது, 'எங்களுக்கு (இலங்கைக்கு) ஒரு கர்தினால் நியமிக்கப்பட வேண்டும்" என்று மல்கம் றஞ்சித் அவர்கள் சொல்லிக் கொடுத்ததையே மகிந்த கூறினாராம். அடுத்த ஆறு மாதத்தில் மல்கம் றஞ்சித் கர்தினாலாக நியமிக்கப்பட்டார். ஒரு நாடகம் திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நிறைவேறியது. 

2015 தேர்தலில் மகிந்த தோல்வியடைய மைத்திரி ஜனாதிபதியானார். 2019ல் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்ற பாப்பரசர் பிரான்சிஸ் அரசியல் தலைவர்களில் ஜனாதிபதியான மைத்திரியை மட்டும் சந்திப்பதாக இருந்தது. ஆனால், கர்தினால் மல்கம் றஞ்சித்தின் விருப்பத்தின்பேரில் மகிந்தவையும் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பின்போது மகிந்தவின் முன்னிலையில் சுமார் ஒன்பது மில்லியன் ரூபாக்களுக்கான காசோலை ஒன்றை பாப்பரசரிடம் கர்தினால் மல்கம் றஞ்சித் கையளித்தார். இலங்கை ஆயர் சபையினால் பொதுப்பணிக்கென சேகரிக்கப்பட்ட நிதி அதுவென பாப்பரசரிடம் கூறப்பட்டது. ஆனால் பாப்பரசர் அந்தக் காசோலையை கர்தினாலிடம் திருப்பிக் கையளித்து, உங்கள் வறிய நாட்டுக்கு இதனைப் பயன்படுத்துங்கள் என்று கூறிவிட்டார். 

அந்த ஒன்பது மில்லியன் ரூபாக்களும் இரத்தக்கறை படிந்த இடத்திலிருந்து வந்தவை என்பதை பாப்பரசர் தெரிந்து கொண்டதால் அதனை ஏற்க மறுத்தார் என்பது கர்தினாலுக்கு தெரியவந்தது. இந்தச் சம்பவமானது ராஜபக்சக்களுக்கும் கர்தினாலுக்குமிடையிலான நெருங்கிய உறவை ரோமுக்குத் தெரியக்கொடுத்தது. 

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தான் நெருங்கிப் பழகும் ராஜபக்சக்களை பாதிக்க வைக்குமென்று கர்தினால் பதற்றமடைகிறார். அதனால்தான் குற்றத்தை ஒப்புக் கொள்பவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கத் தயாராகியுள்ளார். ஆனால், ரணில் விக்கிரமசிங்க தமது காலுக்குள் வசமாக வந்துள்ள பந்தை எவ்வாறு அடிக்கப் போகிறார் என்பதை எவராலும் கற்பனை பண்ண முடியாது. 

அடிக்குறிப்பு: ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையார் எஸ்மன்ட் விக்கிரமசிங்கவின் கூடப்பிறந்த சகோதரரே குருநாகல் பி~ப் ஆகவிருந்த பேராயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க. 1983 யூலையில் தமிழினப் படுகொலை இடம்பெற்ற வேளையில் அதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்த பேராயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க அடுத்த சில மாதங்களில் மாரடைப்பால் காலமானார். 

No comments