நல்லூரில் கடும் தள்ளுமுள்ளு!



நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் விசேட உற்சவங்களில் ஒன்றான சப்பரத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(12.09.2023) மாலை  இடம்பெற்றது.

நெரிசல் காரணமாக 10.ற'கும் அதிகமான பக்தர்கள் காயமடைந்ததுள்ளனர்.

இம்முறை சப்பரத் திருவிழாவில் கடந்த வருடத்தை விட பன்மடங்கு அதிகமாக அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந் நிலையில் புதிய சப்பரம் ஆலய முன்றலைச் சென்றடைந்து நல்லூர் வேற்பெருமான் இருப்பிடத்தைச் சென்றடைந்த பின்னர் ஆலயத்தின் முன்பாகப் பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது வீதித் தடையால் ஒரே தடவையில் ஏராளமான அடியவர்கள் வெளியேறிச் செல்ல முற்பட்ட போது பெரும் அவதிக்கும், சிரமங்களுக்கும் உள்ளாகினர்.

குறித்த வீதித் தடையால் அடியவர்கள் வெளியேறிச் செல்வதற்கும், ஆலய வளாகத்திற்குள் செல்வதற்கும் இரண்டு இடங்களில் சிறு இடைவெளியே காணப்படும் நிலையில் குறித்த இரண்டு பகுதியாலும் அடியவர்கள் வெளியே செல்லவும், ஆலய வளாகத்திற்குள் உள்ளே வரவும் முற்பட்டமையால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் இதனால் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தது. இதுதொடர்பில் அடியவர்கள் பலரும் கடும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.                      

சப்பரம், தேர், தீர்த்தம் போன்ற நல்லூர்க் கந்தன்  ஆலயத்திற்கு அதிகளவு அடியவர்கள் வருகை தரும் விசேட திருவிழாக் காலப் பகுதிகளில் மேற்படி முதலாவது வீதித் தடை தொடர்பில் யாழ்.மாநகரசபை மற்றும் பொலிஸார் உரிய கவனம் செலுத்த  வேண்டுமென்பதே அடியவர்கள் பலரதும் கோரிக்கையாகவுள்ளது. 

No comments