வரிசையில் நிற்க வைக்கப்பட்டு சுட்டுக்கொலை!



முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாம் நாளாக இன்று தொடர்கின்ற நிலையில் இன்றும் நான்கு மனித வன்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

வரிசையில்  நிற்க வைக்கப்பட்டு கைகள் மற்றும் கண்கள்  கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான தடயங்கள் அகப்பட்டுள்ளன.

அகழ்வாய்வின் போது ஜந்து மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சர்வதேச நியமத்துடனான அகழ்வு பணி பற்றி தமிழ் தரப்புக்கள் பேசி வருகையில் புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் அகழ்வுப்பணி காலை ஆரம்பிக்கும் போதும், மதிய உணவு நேரம், மாலை நிறைவடையும் போதே அருகில் சென்று வீடியோ, புகைப்படங்கள் எடுத்து செய்தி சேகரிக்க முடியும் எனவும் ஏனைய நேரங்களில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ கட்டுப்பாடு விதித்துள்ளார்.

அகழ்வு பணி பற்றிய விடயங்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு மறைக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென ஊடகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

அதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், உள்ளிட்டவர்கள் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.


No comments