கஜேந்திரன் எம்.பி மற்றும் வினோ எம்.பிக்கு பிணை


முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பான் விடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூஜை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்.

இதற்கமைவாக குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முல்லைத்தீவு நீதவான் நீதிபதி வு.சரவணராஜா இவர்களை பிணையில் செல்ல அனுமதித்தார். 

No comments