பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா 2023

பிரான்சில் கடந்த 24 ஆண்டுகளாக பிரான்சு மனிதநேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழம் நடாத்தி வரும் ” கோடைகால தமிழர் விளையாட்டு விழா

சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டானது பல்லாயிரம் தமிழ் மக்கள் பல்லின மக்கள், அரசபிரமுகர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்புக்கள்,விளையாட்டுக்கழகங்கள் வீரர்கள், வர்த்தகர்கள்,ஊடகவியலாளர்கள், இன உணர்வாளர்கள், குறிப்பாக இளையோர்களின் பங்கெடுப்புடன் சிறப்புடன் நடைபெற்றது. காலை வழமையான L’Aire des Vents Dugny திடலில் காலை 10.00 மணிக்கு முழவுவாத்திய இசைமுழங்கி அணிவகுத்து வர இறந்துபோன அனைத்து உயிர்களுக்குமான பொதுவான பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுச்சுடரினை மன்னார் அடம்பன் பகுதியில் 1985 ஆம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை. லெப். கேணல். விக்ரர் ( ஒஸ்கா) அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்திருந்தார்.

தொடர்ந்து தமிழ்இனத்தின் தமிழீழ தேசத்தின் அடையாளமான தமிழீழ தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டது. இதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட தமிழீழ வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டது. தேசியக்கொடியினை 2009 ஆம் ஆண்டு தேராவில் பகுதியில் ஆட்டிலறி தளம்மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான கரும்புலி கப்டன். கதிர்நிலவனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கலைகளில் ஒன்றான இனியம் இசைஅணியுடன் தமிழர் விளையாட்டுவிழா வந்திருந்த அரச பிரமுகர்கள், மாநகர முதல்வர்கள், அனைத்து தமிழர் கட்டமைப்பின் பிரதிநிதிகள், தேசப்பணியாளர்கள், அழைத்து வரப்பட்டு பொதுவான நினைவுத்தூபியில் மலர் வணக்கம் செய்யப்பட்டு பிரெஞ்சு, ஐரோப்பிய, புனர்வாழ்வுக்கழக கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. வந்திருந்த பிரெஞ்சு பிரமுகர்கள் கொடிகளை ஏற்றிவைத்தனர். தமிழர் புனர்வாழ்வுக்கொடியை இத்தாலி புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு. கோணேஸ்வரன் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அத்திடலில் திட்டமிட்டதன் படி விளையாட்டுப்போட்டிகள் (சிறுவர், பெரியவர்கள், பெண்களுக்கானது ) நடைபெற்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளான தாச்சிப்போட்டி, முட்டியுடைத்தல், கயிறிழுத்தல் , தலையணைப்போட்டி, சங்கீதக்கதிரை, குறிபார்த்துச் சுடுதல், சிறுவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

கலைப்பகுதியினர் தாயகப்பாடல் போட்டிகளையும், வர்த்தகர்கள் மலிவுவிலை மளிகைப் பொருட்களையும்,நல்வாய்ப்பு சீட்டுக்களையும், வெளியீட்டுப்பிரிவினர் தாயக நினைவுப்பொருட்களையும், மனிதநேய உதவி அமைப்புகள் தமது தேசம் நோக்கிய பணிகள் பற்றிய விளம்பரங்களையும், ஊடகங்கள் போட்டி நிகழ்வுகளையும், ஊடக ஒலிபரப்புகளையும் நடாத்தியிருந்தனர். யவுளிக்கடையினர் சேலைகள், ஆபரணங்களை விற்பனை செய்திருந்தனர்.

சிற்றுண்டிச் சாலையில் அறுசுவை உணவுகள் தமிழீழ உணவகத்தால் வழங்கப்பட்டது. பெரியவர்கள், குழந்தைகள், இளையவர்கள் விரும்பி உண்டு மகிழ்ந்தனர், எதிர்பாராத விதமாக மக்கள் தொகை அதிகமாக இருந்தமையால் மக்கள் நீண்ட வரிசையில் நின்றாலும், இளையவர்களும், தேசபணிச் செயற்பாட்டளர்களின் துரித பணியினால் வழமைநிலைக்கு உணவுகள், சிற்றுண்டிகள் மக்கள் பெற்றுக்கொண்டனர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனத்தின் ஆதரவுடன் கடந்த மாதமளவில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியிலும், துடுப்பெடுத்தாட்ட போட்டியிலும் வெற்றிபெற்ற கழகங்களுக்கும், வீரர்களுக்கும், பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது

விசேடமாக உருவாக்கப்பட்ட ” தமிழீழ வளாகத்தில்” தமிழீழ தேசியக்கொடி, தேசியத்தலைவர்,தேசிய விலங்கான சிறுத்தை, தேசியப்பறவை செண்பகம், தேசிய மரம் வாகை, தேசியப்பூ காந்தள் மலரான கார்த்திகைப்பூ தமிழீழ தேசத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் முதல் இளையவர்கள் பெரியவர்கள், பெண்கள் குடும்பம் குடும்பமாக பல நூறு பேர் அதன்முன்பாக நின்று நிழற்படங்கள் எடுத்துக்கொண்டனர். பாட்டுக் கலைஞர்கள் தாயகப்பாடல் பாடும் போது காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களை பார்த பலர் கண்கள் குழமாகி நின்றனர். 75 வயதான ஓர் அன்னையும், தந்தையும் நடக்க முடியாத நிலையிலும் பிள்ளைகளின் உதவியுடன் வந்திருந்தனர். இங்கு பல ஆண்டுகள் வந்து இருந்தாலும் இந்தத் தடவைதான் இங்கு வரவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது என்றும், இங்கு வந்து பார்த்த போது தாயகத்தில் எவ்வாறு வாழ்ந்தோம் அந்த நினைவுகள் தான் வருகின்றது என்று கண்கலங்கினார்கள். தாங்கள் வாழ்ந்த இடம் எல்லாம் பறிபோவதும், இன்னும் பல உறவுகள் ஒருநேர உணவே இன்றி இருப்பதையும் அவர்களை எல்லாம் புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் நாம் தான் உதவிசெய்ய வேண்டும். அது எங்கள் தேசியத் தலைவரின் விருப்பமும், ஆசையும் அதை எல்லா நாட்டுத் தமிழர்களும் செய்ய வேண்டும் என்றும் தானும் ஒரு மகனை நாட்டுக்காக கொடுத்ததையும், வெளியீட்டுப் பிரிவில் இருந்த மாவீரர் பெட்டகம் புத்தகத்தில் பார்த்து அழுகையாகவே உள்ளது என்றும் கூறினார். எமது மக்களை 14 வருடங்கள் ஆகியும் நிம்மதியாக சிங்களத்திடம் கையேந்தவிடாது வாழவைக்க எமது மக்களால் நிச்சயமாக முடியும். தமிழர்களை இலங்கைத்தீவை விட்டு ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்ய ஒன்றாகி நிற்கின்றார்கள், எமது மக்களை நிம்மதியாக மற்றவர்களிடம் கையேந்த விடாது வாழவைக்க நாம் ஒன்றாக பயணிக்க வேண்டியது அவசியம் என்று உணர்த்தினார்கள்.

இரவு 8:00 மணிக்கு மக்கள் கலையத் தொடங்கினர். எதிர்பாராத வகையில் அந்த வாரம் ஆரம்பித்த நாளிலிருந்து மழையாகவே இருந்தது. 30 ஆம் நாள் அதிகம் வெப்பமும், மழையும் இல்லாது சிறந்த காலநிலையாகவும் இருந்தது. அரச அரசசார்பற்ற பிரமுகர்கள் சந்தோசத்தோடு காணப்பட்டதோடு எமது உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர். வாழும் பிரான்சு மண்ணில் தமிழினத்தின் பண்பையும், பழக்கங்களையும், கடின உழைப்பையும், தமது மண்ணையும்,மொழியையும், கலைபண்பாட்டையும் அவர்கள் தமது உயிராக நேசிப்பதையும் தாங்கள் அறிவார்கள் என்றும் இப்படிப்பட்ட ஓர் இனத்திற்கு நாடு ஒன்று இல்லை என்பது அவர்கள் தமக்கும் கவலையாக இருந்தாலும் அது கிடைக்கும் இன்று போல் அங்கும் சந்தோசமாக வாழவேண்டும் என்பது எங்கள் விரும்பம் என்றும் அதற்காக தமது ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்று கூறியிருந்தனர். இதே நாளில் சமயச்சடங்குகளும், ஊர் மன்றக்கொண்டாட்டங்கள், திருவிழாவும் நடைபெற்றபோதும் இத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொண்டது பெரும் சிறப்பை தமிழ் இனத்திற்கு தந்துள்ளது.

No comments