பணயம்:அமைச்சரிற்கு எதிராக சாணக்கியன்!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டமை அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர்.

இதன் பிற்பாடு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பிச் செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இணைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்தனர்.

அங்கிருந்தவர்களால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன், அவர்களது கமராக்களும் பறிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்த பௌத்த மதகுரு ஒருவர் அவர்கள் சென்ற வாகனத்தின் சாவியை அடாத்தாக பறித்ததுடன், வாகனத்தில் வைத்து உங்கள் அனைவரையும் கொளுத்துவேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.

இதனிடையே மகாவலி அபிவிருத்தி இராஜங்க அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக இனங்களுக்கு இடையில்  காணிகள் சம்பந்தமான குறிப்பாக மயிலத்தமடு - மாதவனை பகுதிகளில் இன முரண்பாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதே போல் இன்றிய தினம் அமைச்சரின் அசண்டையீனம் காரணமாக மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்படுள்ளார்கள்.அதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சர் ஏற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments