நிவாரணமாம்:30ம் திகதி ஆர்ப்பாட்டம்!இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகளுக்கு 6 மாத காலத்திற்குள் நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கருத்து வெளியிட்டுள்ள அவர் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்துவிடும் என தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 988 காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்கள் மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, பேரணி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


No comments