வடமாகாண ஆளுநருடன் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளர் சந்திப்பு


வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் அவுஸ்திரேலியப் எல்லைப் பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழு மற்றும் இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அதன் போது, வடக்கு மாகாணத்திலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களை தடுக்கும் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சுங்க திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படை பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும், புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அவுஸ்திரேலியப் படையின் முதனிலை செயலாளர் மற்றும் அவர்களின் குழுவால் கூறப்பட்டது. 

அதேவேளை வடமாகாணத்திலிருந்து பலாலி விமான நிலையம் ஊடாக சென்னைக்கு நேரடியாக பிரயாணம் நடைபெறுவதாலும், இந்தியா, இலங்கை கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதனாலும், சுங்கத்திணைக்களங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் நாம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை, மன்னார் முதலிய துறைமுகங்களை  அபிவிருத்தி செய்து வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவுள்ளதால், மேலும் சடடவிரோத எல்லைமீறல்கள், நடைபெற வாய்ப்புகள் உள்ளதால் அது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் கூறியிருந்தார்.  

போதைப்பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் அதன் பாவனை மற்றும் தாக்கம்  வடக்கு மாகாணத்தில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கே உற்பத்தி செய்யப்படாத போதைப்பொருட்கள் இங்கே கிடைக்கின்றது என்றால் எல்லைகளை மீறி வெளிநாடுகளிலிருந்து இங்கே கொண்டுவரப்படுகின்றது. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. அதற்கு அவுஸ்திரேலியப் எல்லைப்படையின் உதவி தேவைப்படும் என்பதையும் ஆளுநர் கூறியிருந்தார்

No comments