வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு


வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,  

வடபகுதியில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது. இருப்பினும் 90 விகிதத்துக்கு மேலான மருந்துகள் அதாவது முக்கியமான வருத்தங்களுக்குரிய மருந்துகள் இருக்கின்றன, 

திடீரென ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்ற போது நோயாளிகள் அவஸ்தைக்கு உள்ளாகின்றார்கள்.

குறிப்பாக சலரோகம், உயர்குருதி அழுத்தம் போன்ற நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் எமது பகுதிகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கான சிகிச்சை மருந்துகள் இருக்கின்றன, சில சமயங்களில் அவ்வாறான மருந்துகளுக்கும் கடந்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்பட்ட போது குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகள் மருந்தகங்களில் வாங்கி இருக்கின்றார்கள்.

மிகவும் துரதிஷ்டவசமாக மிக வறுமையானவர்கள் இந்த மருந்தை குறிப்பிட்ட மாதம் வாங்கி பாவிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

அப்போது அவர்களுக்கு உதவி செய்வதற்கான உதவுகின்ற நடைமுறைகளை சிலர் செய்து வருகின்றார்கள் சிலர் பாதிக்கப்பட்டது வருந்தத்தக்கது. இருப்பினும் தற்போது சுகாதார அமைச்சின் கீழ் இந்த அதிகமான மருந்துகளை கிரமமாக தருவதற்குரிய  ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக இப்போது சத்திர சிகிச்சைகளுக்கான மருந்துகள் அண்மையில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் இப்போது அதுவும் வந்த நிலையில் இருக்கின்றது, 

ஆகவே பொதுமக்கள் இந்த அசௌகாரியத்தை எதிர்கொண்டு மருந்துகளை அவர்கள் கவனமாக பாவிக்க வேண்டும். குறிப்பாக நோய் ஒன்று வருவதை அவர்கள் தவித்துக் கொள்ள வேண்டும்.

 உதாரணமாக அதிகளவானோர் விபத்துக்குள்ளாகின்றார்கள் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களும் வயது வந்தவர்களும் பல்வேறு தொற்றா நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.

அதாவது சலரோகம், இருதய நோய்,  மாரடைப்பு ஏற்படுதல் போன்ற வியாதிக்கு உள்ளாகின்றார்கள். ஆகவே அவர்கள் அன்றாட அடிப்படையான நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். 

குறிப்பாக அவர்கள் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கத்தை அவர்கள் பின்பற்ற வேண்டும், மற்றும் புகைத்தல் மதுபாவனை மற்றும் பல்வேறு நெருக்கடிகளில் இருந்து அவர்கள் விடுபட்டு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments