நீதிக்கு சாள்ஸ் ஆலோசனை!

 


மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தமிழ் நீதியரசர்களிடம் வடக்கு, கிழக்கு வழக்குகளை ஒப்படைக்கலாம் என்றும் இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் இதன்மூலம் வழக்கு தாமதங்களை தவிர்க்கலாம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம.பி.யான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்' தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்  உரையாற்றிய போதே மேற்கண்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வரும் குற்றவியல் வழக்கு கோவைகள் தொடர்பில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இதற்கு வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில்  வழக்குகள் நடப்பதே காரணம்.


மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அந்த கோவைகள் வரும்போது ஆங்கில மொழிபெயர்ப்புகளில் தாமதம் ஏற்படுகின்றது. ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தமிழ் நீதியரசர்கள் உள்ளனர் அவர்களிடம் அந்த வழக்குகளை ஒப்படைக்கலாம். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதன்மூலம் வழக்கு தாமதங்களை தவிர்க்கலாம்” என்றார்.


இதன்போது பதிலளித்த நீதி அமைச்சர், “நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறையே இதற்கு காரணம். இதனை தவிர்க்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.


தொடர்ந்தும் உரையாற்றிய சாள்ஸ் எம்.பி ,“அதிகமான வழக்குகள் பொய்யாக போடுவதாலும் இவ்வாறாக தாமதங்கள் ஏற்படுகின்றன. 


நீண்ட காலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடனும் உங்களுடனும் பேசியுள்ளோம். அண்மையில் தேவதாசன் என்ற புற்றுநோய் நோயாளி விடுதலை செய்யப்பட்டார். அதற்கு அரசுக்கு நன்றி கூறுகின்றோம். 


இதேவேளை அரசியல் கைதிகள் பலருக்கு புதிதாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


No comments