13கிடக்கட்டும்:வியாபாரம் முடிந்தது!

 


பூநகரி மற்றும் மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசியதாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

"கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி மற்றும் 500 மெகாவாட் காற்றாலை திட்டம் உள்ளிட்ட இலங்கையில்; செயற்படுத்தவுள்ள பல திட்டங்கள் தொடர்பிலும் விவாதிக்க ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தமை பெருமையாக உள்ளது" என்று அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே அதானியுடனான சந்திப்பும் நடந்துள்ளது.

அதானியின் நிறுவனம், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பூநகரியில் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க ஒப்புதல் அளித்திருந்தது.

சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலரிற்கும் அதிகமான முதலீட்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களை; உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் கௌதம் அதானி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அதானியின் காற்றாலை தொடர்பில் மன்னார் பகுதியில் தொடர்ச்சியான எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments