இத்தாலி முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு


வடக்கு இத்தாலிய நகரமான மிலனில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேர் புகையைச் சுவாசித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இத்தாலிய செய்தி நிறுவனமான ஏஎன்எஸ்ஏ (ANSA) இன்ற வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தீ விரைவாக அணைக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். புகையால் அங்கிருந்தவர்கள் பலருக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அத்துடன் புகையால் குடியிருப்பாளர்களும் மயக்கமடைந்தனர்.

69 வயதுக்கும் 87 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து பெண்களும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

தீ விபத்துக்குக் காரணம் இதுவரை தெரியவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் படையின் நான்கு குழுக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லமான காசா பெர் கோனியுகியில் வயது முதிர்ந்த மருத்துவமனைப் பராமரிப்பு தேவையில்லாத மக்கள் வசித்து வந்தனர்.

No comments