நாவாந்துறை மோதல் சம்பவம் ; இருவர் கைது


யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாவாந்துறை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது கிராமத்தை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை இரவு இரு குழுவினரும் மோதலில் ஈடுபட்டனர். அதன் போது , வீதிகளில் கண்ணாடி போத்தல்களை உடைத்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு , நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

அதேவேளை தாக்குதலில் காயமடைந்த நான்கு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments