தமிழின விரோத செயற்பாடுகளை ஊதி வளர்க்கும் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு என்ன நிகழ்ந்தது? பனங்காட்டான்


தமிழரின் தோலில் செருப்பு அணிய விரும்பிய கே.எம்.பி. ராஜரட்ண, தமிழரை பட்டினி போடுவதில் மகிழ்ச்சி கண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, யாழ். பொது நூலகத்துக்கு தீமூட்டி நடனமாடிய காமினி திசநாயக்க, 83 யூலை தமிழின அழிப்பின் சூத்திரதாரி சிறில் மத்தியு போன்றவர்களின் குடும்ப வாரிசுகள் எத்தனை பேர் சிங்கள தேச அரசியலில் இன்று காணப்படுகிறார்கள். இவர்களை ஏன் சிங்கள தேச மக்கள் புறக்கணித்து வருகின்றனர்? 

இனவாதமும் மதவாதமும் ஒன்றுடனொன்று இணைந்ததாக இப்போது இலங்கையை ஆட்சி புரிகிறது. அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் பொறுத்தளவில் இவையிரண்டும் அவர்களுக்கு செல்லப்பிள்ளைகள். 

எந்தக்கட்சி பதவிக்கு வந்தாலும் சிங்களமும் பௌத்தமுமே அவர்களுக்கு இரட்டைக் கண்கள். இதனை நன்குணர்ந்த ரணில் நன்றாகவே இதற்கு தீனி போட்டு வளர்க்கிறார். தமது சொந்தக்கட்சியின் பலமில்லாத இவரது அரசியல் வாழ்வுக்கு இது அத்தியாவசிய தேவையாகவுள்ளது. 

ரணிலின் அரசியல்பாணி பற்றி பல தடவை இப்பந்தியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. ஒரு பிரச்சனையை நன்றாக வளர்த்துவிட்டு, அதனை முக்கியமற்றதாக மாற்றுவதற்கு புதிய பிரச்சனையை உருவாக்குவதே இவரது பாணி.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு கடந்த பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் தீர்வு காணப்போவதாக முன்னர் அறிவித்தவர் இவர். இப்போது அதனை இந்த வருட இறுதிக்குள் தீர்க்கப்போவதாகக் கூறி மீண்டும் பேச்சுவார்த்தை என்ற நொண்டிக் குதிரையில் ஏறியுள்ளார். இங்குதான் மதவாதம் மீளுருவாக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், மகாவலி வலயம் என்பவற்றுக்கூடாக மதப்பிரச்சனையை பூதாகரமாக்கி வளர்த்து வருகிறார்.

சமகாலத்தில் அதனை தீர்த்து வைக்கும் வல்லமையும் தமக்கேயுண்டு என்பது போன்ற தோற்றப்பாட்டையும் உருவாக்கி வருகிறார். இலங்கையில் சனத்தொகையில் சிங்களவர் அதிகமானவர்கள் என்பதை வைத்து அவர்களை பெரும்பான்மையினராகக் காட்டி, அவர்களின் மொழிக்கும் மதத்துக்கும் எல்லாவற்றிலும் முன்னுரிமை வழங்குவது சிங்களத் தேசியமாகிவிட்டது. இதற்கேற்ப சகல அரச இயந்திரங்களும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

சிங்களம் இலங்கையில் முதன்மையானது என்ற அடிப்படையில் 1944ம் ஆண்டு சட்டசபையில் ஓர் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதனை கொண்டு வந்தவர் அதன் உறுப்பினராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன. ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அரச கரும மொழியாக்க வேண்டுமென்று இப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டது. 

இலங்கைக்கு பிரித்தானியர் சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னரே, இலங்கையின் அரச கரும மொழியாக சிங்களம் ஏற்கப்பட வேண்டுமென முதன்முதலாக முன்மொழிந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்பதை வரலாறு பதிவிட்டுள்ளது. 1956ல் பிரதமராகப் பதவியேற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். 1944ல் ஜே.ஆர். விரும்பியதை பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர் பண்டாரநாயக்கா அமலாக்கினார். 

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துடனான பிரதேச நிர்வாக முறை வேண்டுமென பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்னர் கருத்துரைத்த பண்டாரநாயக்க, 1956ல் பிரதமராக பதவியேற்றதும் சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றி, சிங்கள மக்களின் ஏகோபித்த தலைவராக நிலைநாட்ட முயன்றார். 

அவ்வேளை வெலிமட எம்.பியாகவிருந்த கே.எம்.பி.ராஜரட்ண மிக மோசமான இனவாதத்தை நாடாளுமன்றத்தில் கக்கினார். தமிழரின் தோலில் செருப்புத் தைத்து அணியும் நாளே தமக்கான பொன்னாள் என்று இவர் உரையாற்றியபோது நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்க அணி எம்.பிக்கள் கையொலி எழுப்பி வரவேற்றனர். கே.எம்.பி. ராஜரட்ண சிங்கள மொழி முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்தவர். சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து தமிழ் எம்.பிக்கள் சத்தியாக்கிரகம் இருந்தபோது அவர்கள்மீது தாக்குதல் நடத்திய சிங்கள குண்டர்களுக்கு தலைமை தாங்கியவர்களில் இவரும் ஒருவர். 

இவரது மனைவி குசுமா ராஜரட்ண ஊவாபறணகம தொகுதியின் எம்.பியாக இருந்தவர். தமிழின எதிர்ப்புச் செயற்பாடுகளில் கணவருக்குச் சற்றும் இளைக்காதவர் இவர். இலங்கையில் இனவெறிக் கோசங்களை முன்னெடுத்த முதலாவது பெண் அரசியல்வாதி என்று இவரைக் குறிப்பிடுவார்கள். 

தமிழின விரோத செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட கே.எம்.பி. ராஜரட்ணவும் அவரது மனைவியும் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்;வியடைந்தனர். எனினும், சிங்கள தேசம் அவரை செனட்டராக நியமித்து மதிப்பளித்தது.  இந்த மதிப்பளிப்பு தமிழினத்துக்குக் காட்டப்பட்ட அபாய எச்சரிக்கை. 

1981ல் யாழ்ப்பாணப் பொதுநூலகம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசின்; அமைச்சர்களது முன்னெடுப்பில் தீமூட்டி எரிக்கப்பட்டது. இதற்குத் தலைமை தாங்கியவர்கள் காமினி திசநாயக்கவும், சிறில் மத்தியுவும். இதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்த சிறில் மத்தியு 1983 யூலை மாத தமிழினப் படுகொலைகளின் பிரதானி. தமிழின சங்காரத்துக்கு பேச்சாலும் செயலாலும் தொடர்ந்து வடிவம் கொடுத்து வந்தவர். 

'யாழ்ப்பாணத் தமிழர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுத்தால் சிங்கள மக்கள் மகிழ்வர். தமிழரை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் சந்தோசமடைவர்" என்று 1983 யூலை 11ம் திகதி லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு கருத்துரைத்தவர் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன. இதனைத் தொடர்ந்து வந்த வாரத்தில் 83 யூலை இனஅழிப்பு இடம்பெற்றது. 

நாட்டின் சகல இன மக்களுக்கும் பொதுவானவரான ஜனாதிபதி இவ்வாறு இனத்துவேசமாக கருத்துக் கூறியதை சிறில் மத்தியு முழுமையாக ஏற்று தமிழின அழிப்பை 83 யூலையில் மேற்கொண்டார். எனினும், 1984ல் இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட ஏதோ முறுகல் காரணமாக சிறில் மத்தியுவை ஜே.ஆர்.கட்சியிலிருந்து நீக்கினார். ஆனால், ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியானதும் அவர் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட்டதும், பௌத்தத்தை பாதுகாக்க எழுக, புலி என்பவர் யார் என்று சிறில் மத்தியு இரு நூல்களை வெளியிட்டதும், அரச ஆதரவுடன் இறுதிவரை இனவாதியாகவே அவர் வாழ்ந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு. 

1987ல் ஜே.ஆரும் ராஜீவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நிறைவேற்றிய நாளன்று இடம்பெற்ற படை அணிவகுப்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் ராஜிவ் காந்தியை தாக்க முயற்சித்தார். இந்த சிப்பாய்க்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் இடம்கொடுத்து ரணசிங்க பிரேமதாச கௌரவப்படுத்தினார். தமிழருக்கு எந்த உரிமைகளும் வழங்கப்படக்கூடாதென்பதை இதனூடாக சிங்கள தேசம் வெளிப்படுத்தியது. 

1989 காலப்பகுதியில் ஜே.வி.பி.யினரும் இதே வழியைத்தான் பின்பற்றினர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறி தமிழ் வணிகர்களையும் தமிழ் பிரமுகர்களையும் கொழும்பில் படுகொலை செய்தனர். இது அப்பட்டமாக தமிழினத்தின் மீதான அரசியல் வழித் தாக்குதலாகவே வெளிப்பட்டது. 

கோதபாய ஆட்சியிலும் இன்றைய ரணிலின் ஆட்சியிலும் தமிழின விரோத செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குபவராக சரத் வீரசேகர என்ற எம்.பி. அடையாளம் காணப்படுகிறார். முன்னாள் கடற்படை அதிகாரியான இவர் சிங்கள - பௌத்த மக்களின் ஏகதலைவராக தம்மை காட்டிக்கொள்ள இனவாதம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். 1980களில் யாழ்ப்பாணத்தில் ராணுவத்தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் ஜெனரல் ஆனந்த வீரசேகரவின் சகோதரர் இவர். ஆனந்த வீரசேகர ஓய்வு பெற்ற பின்னர் பௌத்த பிக்குவாக மாறி புத்தங்கல ஆனந்த என பெயர் சூடினார். 

1944 முதல் இன்றுவரையான இனவாதமும் மதவாதமும் பேரெழுச்சி கொண்ட சில நிகழ்வுகளை இங்கு நினைவுக்கு உட்படுத்தியதற்கு முக்கிய காரணம் உண்டு. 

சிங்கள மக்களுக்காக அவர்களின் காவலர்களாகவும் உரிமைக்குரல்களாகவும் தங்களை அடையாளம் காட்டி அதற்காக இனவாதத்தை புகுத்தி, தமிழினத்தை கருவறுக்க முனைந்தவர்களை - அவர்களின் வாரிசுகளை அதே சிங்கள மக்கள் இன்று எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறார்கள்? 

ஜே.ஆர்.ஜெயவர்த்தன, கே.எம்.பி.ராஜரட்ண, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, காமினி திசநாயக்க, சிறில் மத்தியு போன்றவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு சிங்கள தேசம் எத்தகைய மதிப்பு வழங்கி அவர்களை போற்றித் துதிக்கிறது. அவர்களது சொந்தத் தொகுதி மக்களே அவர்களை மறந்தவர்களாகியுள்ளனர். 

தமிழரின் தோலில் செருப்பு அணிய விரும்பிய கே.எம்.பி. ராஜரட்ண, தமிழரை பட்டினி போடுவதில் மகிழ்ச்சி கண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, யாழ். பொது நூலகத்துக்கு தீமூட்டி நடனமாடிய காமினி திசநாயக்க, 83 யூலை தமிழின அழிப்பின் சூத்திரதாரி சிறில் மத்தியு போன்றவர்களின் குடும்ப வாரிசுகள் எத்தனை பேர் சிங்கள தேச அரசியலில் இன்று காணப்படுகிறார்கள். இவர்களை ஏன் சிங்கள தேச மக்கள் புறக்கணித்து வருகின்றனர். 

இன்று முன்னையவர்கள் பாணியில் இனவாதத் தாண்டவம் புரியும் சரத் வீரசேகரவும், விமல் வீரவன்ச - உதய கம்மன்பில போன்றவர்களும் சிங்கள தேச வரலாறு கற்றுத் தந்த பாடத்தை நினைவில் கொள்வார்களா? இதனை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?





No comments