இந்தியாவில் தொடரூந்து விபத்து: 288 பேர் பலி! 800க்கு மேற்பட்டோர் காயம்!

பெங்களூர் யஷ்வந்த்புரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு தொடரூந்து சில பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரவு 7 மணியளவில் தடம் புரண்டன. இதில் இரண்டு பெட்டிகள் அருகில் இருந்த இணை தண்டவாளத்தின் மீது சரிந்து வீழ்ந்தது.

அப்போது மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் தொடரூந்து நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி நேற்று பிற்பகலில் புறப்பட்ட கொரமண்டல் விரைவு தொடரூந்து எதிர்த் தடத்தில் வந்து கொண்டிருந்தது.

வேகமாக வந்த கொரமாண்டல் தொடரூந்து, தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதியதில் 12 பெட்டிகள் கவிழ்ந்தன. சில பெட்டிகள் அங்கு நின்று இருந்த சரக்கு ரயில் மீதும் மோதின.

ஒரே இரவில் மற்றும் சனிக்கிழமை காலை வரை குறைந்தது 288 உடல்கள் மீட்கப்பட்டன என்று ஒடிசாவின் தீயணைப்புத் துறையின் இயக்குனர் சுதன்ஷு சாரங்கி  தெரிவித்தார். காயமடைந்த 800க்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட சூறாவளியின் போது, நெரிசல் மிகுந்த பயணிகள் தொடரூந்து தண்டவாளத்தில் இருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, குறைந்தது 800 பேர் உயிரிழந்தமை இந்தியாவின் மிக மோசமான தொடரூந்து பேரழிவாகும்.

No comments