கௌதாரிமுனைக்கு காற்றாலை வருமா? வராதா?



கௌதாரிமுனை காற்றாலை திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்ட கூட்டம் குழப்பத்துடன் முடிவுக்கு வந்திருந்தது.

காற்றாலையினால் பிரதேச மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்கான  விசேட கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்,அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

கூட்டத்தில் யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக  மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக நியாயமற்ற  கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக கூட்டத்தில்  காற்றாலைக்கான அனுமதி தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படாது இழுத்தடிக்கப்படவே ஒருங்கிணைப்புக்குழு தலைவர் என்ற வகையில் தான் அனுமதியினை வழங்கப்போவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அங்கயன் இராமநாதன் உள்ளிட்டவர்கள் தன்னிச்சையான முடிவென ஆட்சேபனை தெரிவித்தனர்.  

அவ்வேளையிலேயே கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் -  ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின்  அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, அவை நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர்,  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.


No comments