யாழில். சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு


யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் முதல் அரையாண்டில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 53 பதிவாகி இருந்தன. 

இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் , கடந்த மே மாதம் இறுதி வரையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 06 முறைப்பாடுகளும் , சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்14 முறைப்பாடுகளும் ,  மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் 04 முறைப்பாடுகளும் ,  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 06 முறைப்பாடுகளும் , கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் 03 முறைப்பாடுகளும் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் 06 முறைப்பாடுகளும் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 05 முறைப்பாடுகளும் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் 07 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. 

18 வயதுக்குட்பட்டோரை அச்சுறுத்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், மிரட்டுதல், சித்திரவதைக்குட்படுத்துதல் ,உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பாலியல் ரீதியான தொல்லை ,போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன எனவும் , அவை வீடுகள் , பாடசாலைகள் , தனியார் கல்வி நிலையங்களில் நடைபெற்றன எனவும் முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து குறித்த முறைப்பாடு தொடர்பில்  நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டநியதியின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்திற்கும்  உரிய  சட்டகோவைக்கு அமைய நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர். 

No comments