தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்ய முயன்றதாக லொஹான் மீது குற்றச்சாட்டு


தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது.

அத்தோடு ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக் காவலர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த தனிநபர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக 2021 ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மேலும் அவர், இழைத்த குற்றங்கள் குறித்து நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளதாகவும் ஆகையால் அவர் மீது சிறைச்சாலையில் ஆயுதங்களை பயன்படுத்தியமை, கொலை முயற்சி, அச்சுறுத்தல் மற்றும் மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த விருப்பமின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் புரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற லொஹான் ரத்வத்த, அங்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குழுவை வரவழைத்து அவர்களை மண்டியிடும்படி கட்டளையிட்டு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, தூக்கு மேடையை பார்வையிட, நண்பர்கள் குழுவினருடன், மது போதையில், மாலை 6 மணிக்கு பின்னர், வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக லொஹான் ரத்வத்த பிரவேசித்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments