கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார்


நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த சம்பவம் தொடர்பாக நான் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அத்தோடு நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணொளிகளையும் நான் பார்வையிட்டேன்.

இந்த காணொளியைப் பார்க்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் போன்று செயற்படவில்லை.

பொலிஸாரை ஒருமையில் பேசுவது மற்றும் கடுமையான சொற்பிரயோகங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பாக நான் பொலிஸாரிடம் முழுமையாக தகவல்களை பெற்றுக் கொண்டிருந்தேன்.

பரீட்சை மண்டபத்திற்கு அருகில் இவர்கள் கூட்டமாக இருப்பதாக அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சிவில் உடையில் வந்த பொலிஸார் இந்தக் குழுவினரிடம், கேள்விகளை கேட்டுள்ளனர்.

முதல் தடவையாக பொலிஸார் தங்களை அடையாளம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், குறித்த காணொளிக் காட்சியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு பொலிஸாரின் பின்னாள் சென்று, அவரின் டீ சேட்டை பிடித்து இழுக்கிறார்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கஜேந்திரகுமாரின் கையைத் தட்டிவிட்டு, ஓடுகிறார்.

பின்னர், பரீட்சை மண்டபத்தின் வேலிக்கு அருகில் இருந்த பொலிஸாரிடம் சென்ற இவர், அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இது பொலிஸாரின் கடமைக்கு இழைக்கப்பட்ட இடையூறாகும்” என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments