பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்காலின் 14 ஆம் ஆண்டு நினைவுநாள்


முள்ளிவாய்க்கால் முடிந்து போன இனவழிப்பின் புதியதொரு வரலாற்றின் ஆழமாய் புதைந்த அத்தியாயம்.

இன்று 14 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் இணைந்து கொட்டொலிகள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை அடைந்து, அங்கே தமிழின அழிப்புக்கெதிரான மற்றும் எமது அரசியற்கோரிக்கைகளை கொட்டொலிகளாக எழுப்பிக்கொண்டே பிரித்தானிய பிரதமர் வதிவிடமான இல 10 Downing Street க்கு  முன்பாக ஒன்று கூடினார்கள்.

தொடர்ந்து நினைவு நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது.  ஆரம்ப நிகழ்வாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வட கிழக்கு செயற்பாட்டாளர் அப்பன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

பிரித்தானிய தேசிய கொடியினை இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி பாபரா அவர்கள் ஏற்றிவைத்தார் . தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை ஈழ விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்ற இரு மாவீரர்களின் சகோதரர் கனி என்று அழைக்கப்படும் சுரேசு இரங்கசாமி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

இறுதிவரை முள்ளிவாய்க்கால் களமுனைவரை நின்று போராடிய சிறீஸ்காந்தன் என்று அழைக்கப்படும் அகிலரூபன் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்காக சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கம் இடம்பெற்றது.

பழமைவாத கட்சியின் Carshalton மற்றும் Wallington பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் Hon. Elliot Colburn , Thurrock பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் Hon. Jackie Doyle Price மற்றும் Chipping Barnet பகுதியின் பாரளுமன்ற உறுப்பினர் 

Rt. Hon. Theresa Villiers ஆகியோரின் உரையினை தொடர்ந்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியற்துறை பொறுப்பாளர் திரு நியூட்டன் எழுச்சி உரையினை ஆற்றினார். 

தொடர்ந்து பொதுமக்களுக்கான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.




No comments