கிளிநொச்சியில் அளவீடு இல்லையாம்!



கிளிநொச்சியில் உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். 

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையில் பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோவில், வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, குச்சவெளி விகாரைகள், தையிட்டி விகாரை, ஆனையிறவிலும் கிளிநொச்சி நகரிலும் புதிய விகாரை அமைப்பதற்கான முன்னெடுப்புகள், பரந்தன் சந்தி புத்தர் சிலை, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் விகாரை அமைத்தல் மற்றும் பூநகரி விகாரை உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.


இச்சமயத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தன்னால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமைச்சரிடத்தில் கையளித்தார்.

புனித பூமிகளுக்குரிய காணிகளை பொதுமக்கள் கையகப்படுத்த முனைவதாலேயே அவ்விடங்களை தாம் அளவீடு செய்வதாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டதை உடனடியாகவே மறுத்துரைத்த சிறீதரன் எங்கள் மக்கள் அத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை என மறுதலித்திருந்தார்.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர் உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதற்கு, தொடர்புடைய திணைக்களங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்துள்ளார்.


No comments