வெளியே செல்லும் கஜேந்திரகுமார்!

 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவதற்காக எந்தவொருவொரு முன்மொழிவுகளையும் முன்வைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள தமிழ்த் தலைவர்கள், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வெண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


அத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான யோசனை முன்வைப்பதற்காக ஒன்றிணைந்த எதிரணியினரால் உருவாக்கப்பட்ட குழுவிலிருந்து விலகியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டைதை அடுத்து, அதன் உள்ளடக்கமானது கருத்து வெளியிடும் சுதந்திரம், மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவற்றை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அடக்குமுறை அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதாக இருப்பதாகவும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. 


இதனையடுத்து, குறித்த சட்ட மூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதித்த நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, அனைத்து தரப்பிடமிருந்தும் அச்சட்டமூலத்தில் மாற்றப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான முன்மொழிவுகளைக் கோரியதோடு அதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் கால அவகாசத்தினையும் அறிவித்துள்ளார். 


இந்த நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் மேற்கண்டவாறான அறிவிப்பினை விடுத்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, 


தமிழரசுக்கட்சி


இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றுவோம் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலும் வாக்குறுதிகளை அளித்திருந்தாலும். அதனை தற்போது வரையில் நிறைவேற்றவில்லை.  


இருப்பினும், இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்ட மூலங்கள் அனைத்தும் இருப்பதை விடவும் மிகவும் ஆபத்தானவையாகவே உள்ளது. 


அதேநேரம், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தினை தடுப்பதற்கு புதிதாக பிறிதொரு தட்டத்தினை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆகவே புதிய சட்டவாக்க முயற்சிகளை கைவிடும் அதேநேரம், ஏலவே உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்கிவிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 


மேலும் பயங்கரவாதம் போன்ற விசேடநிலைமைகள் உருவாக்கின்றபோது அவசரகால பிரகடனத்தினை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்றார். 


இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தெரிவிக்கையில், 


1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாக்கப்பட்டது முதல் தற்போது வரையில் தமிழினமே முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.


எத்தனையோ இளைஞர்கள் தமது வாழ்க்கையை தொலைத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தான் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம், மற்றும் தென்னிலங்கை அமைப்புக்கள் சில இந்தச் சட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்துள்ளது. 


இவ்வாறான நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அச்சட்டம் நீக்கப்பட்ட அதன் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. 


ஆகவே, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பிறிதொரு சட்டத்தினைக் கொண்டுவருவதையோ அந்தச் சட்டத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவதையோ நாம் ஏற்றுக்கொள்ள வில்லை. அந்த வகையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலத்தினை கைவிடும் அதேநேரம் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்க வேண்டும் என்றார்.


அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், எம்மைப்பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகாரத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையில் தான் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உருவாக்கப்பட்டள்ளது.


இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அரசாங்கத்துக்கு எதிரான அனைத்துக் குரல்களும் அடக்கப்படும். ஆகவே இப்புதிய எதிர்ப்புச் சட்டமூலத்தினை முழுமையாக கைவிடும் அதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்க வேண்டும்.


இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு மாற்றாக புதிய வரைபொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.


அந்தக்குழுவின் அங்கத்துவத்தில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். எனினும், எமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி குறித்த குழுவிலிருந்து நான் வெளியேறியுள்ளேன் என்றார். 


இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாக்கப்பட்டு, தமிழ் இளைஞர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறைகளில் உள்ளார்கள். 


ஆகவே, ஜனநாயகத்திற்கும், மனிதர்களின் அடிப்படைய உரிமைகளுக்கும் எதிரான அச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும். அத்துடன், புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 

No comments