படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்து பயணிப்போம்


ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். எம்மை அடக்க நினைக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் 

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தினால் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசு தயங்குகின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தை விட பாரதூரமான, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயல்கிறார்கள் .இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம். 

நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும். நீதி வேண்டும்.  அதுவரை , படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments