இறுதி நகர்வை நோக்கி பிராம்டன் தமிழின அழிப்பு நினைவாலயம்
ஈழத்தில் தமிழர் பூர்வீக தாயகத்தில் தொடர்ச்சியாக நடந்தேறிய, நடத்தேறும் தமிழின அழிப்பை அப்பெரும் துயரத்தை நினைவில் கொள்ளும் வகையிலும், இனப்படுகொலைக்கான முழுமையான அங்கீகாரத்தை உலகளாவி நிலைநாட்டும் பெரும் முயற்சியிலும், 2021 சனவரியில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழின அழிப்பு நினைவாலயம் இடித்தழிக்கப்பட்ட போது, பிராம்டன் நகரசபைப்பிதா பற்றிக்பிரவுன் தலைமையிலான சபையின் முழுமையான அனுசரணையுடன், பிராம்டன் நகரின் பிரதான பூங்காவில் தமிழின அழிப்பு நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதற்காக, பிராம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிராம்டன் தமிழ் மூத்தோர் கழகம் ஆகியவை இணைந்து, 2021 இல் உருவாக்கிய தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பு (TGMO), உலகளாவிய பல்துறைசார் தமிழ் வல்லுநர்களை, அதுவும் 2009 இற்கு முன்னர் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னியில் தமது பணிகளை சிறப்புறச் செய்தவர்களை இணைத்து, தனது பணிகளை முடுக்கிவிட்டிருந்தது நீங்கள் அறிந்ததே.
2021-2022 இல், பீ பிரீடேஸ் சர்வதேச வரைகலை அமைப்பால் நடாத்தப்பெற்ற உலகளாவிய நினைவாலயத்திற்கான வடிவமைப்புப் போட்டியும், அதனூடு தயாரான இறுதி தமிழின அழிப்பு நினைவாலய வடிவமும், அதற்கான இறுதி அனுமதிக்கான பிராம்டன் நகரசபை துறைசார் வல்லுநர்களுடனான TGMO வல்லுநர்களின் தொடர் தொடர்பாடல்களின் பின்னர், அதற்கான இறுதி அங்கீகாரம் கடந்த ஆண்டு 2022 இல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு யூன் மாதம், பிராம்டன் நகரசபையில் வைத்து அதன் முப்பரிமாண வடிவமைப்பை பிராம்டன் நகரசபைப்பிதா பற்றிக்பிரவுன் அவர்கள் அனைவரின் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பின் (TGMO) துணைத்தலைவரும், ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை பேராசிரியருமான, சிவா சிவதயாளன் அவர்கள் தமிழ் இனப்படுகொலையின் வலிகளையும், அமையவிருக்கும் நினைவாலயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி, இனத்தின் சார்பில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இவ்வருடம் பெப்ரவரி மாத ஆரம்பத்தில், இறுதி முன்னெடுப்புக்கள் குறித்த விரிவான விளக்கம் நகரசபைப்பிதா பற்றிக்பிரவுனுக்கும் நேரடியாகவும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இறுதி நிர்மாணத்திற்கும், அதற்கான நிதிசேரிப்பிற்குமான செயற்பாடுகள் தீவிரம் பெற்றன. அதேவேளை நகரசபைக்கும் பணிகளை ஒருங்கமைக்கும் தமிழின அழிப்பு நினைவாலய அமைப்பு (TGMO) இற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டாக வேண்டும். அது குறித்த முன்வரைபு கடந்த வாரமே கிடைக்கப் பெற்றுள்ளது.
அதில், The Brampton Tamil Association and the Brampton Tamil Seniors Association in order to facilitate the Memorial created the non-profit corporation TGMO; எனக் குறிப்பிட்டு 18 பக்கங்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டு அப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது, TGMO அமைப்பின் பொறியியல் மற்றும் சட்டத்துறை வல்லுநர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இறுதி ஆய்வின் பின்னர், இறுதிக்கபட்ட நகர்வுகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் உட்பட, அனைத்தும் விரைவுபடுத்தப்படும்.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக நினைவாலய அமைப்பின் முன்னெடுப்புகள் பல சவால்களையும் எதிர்நோக்கியுள்ளன. எம் துறைசார் வல்லுநர்கள் சிலர் நெருக்கடிகளையும், அவதூறுகளையும் எதிர்கொண்டுள்ளனர். அவை எம்மத்தியில் இருந்தே உருவாக்கப்படுவது பெரும் துயர் தருகிறது. தமிழர் இனப்படுகொலையை உலக இனப்படுகொலை வரலாற்றில் நிரந்தர அங்கமாக்க முயலும் இப்பெரும் முயற்சியின் ஒருபணி எம் அனைவரின் ஒன்றுபட்ட சக்தியால் எச்சவாலையும் கடந்து எல்லையை எட்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் எம் பயணம் தொடர்கிறது. எம்மினத்தின் வலிகளை மனதில் நிறுத்திப்பயணிப்போம்.
மேலதிக தகவலுக்கு:
https://tamilgenocidememorial.org/
Post a Comment