நெடுந்தீவு கொலை - கத்தி மீட்பு!


நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதியளித்தது.

அதனடிப்படையில் சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மூதாட்டி வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 51 வயதுடைய நபரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்களுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

No comments