நெடுந்தீவு கொலை சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்த உத்தரவு!


நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து , 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் , 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து தங்கியிருந்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

குறித்த நபர் வெளிநாடொன்றில் வசித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்நாட்டில் இருந்து , இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் எனவும் , அவரிடம் இருந்து கொலையானவர்களின் உடைமைகள் மற்றும் நகை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து  விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என மன்றில் கோரினர். 

பொலிசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்று , 48 மணி நேரத்தின் பின்னர் சந்தேகநபரை மன்றில் முற்படுத்துமாறு பணித்தது. 

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபரை சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அழைத்து சென்ற பொலிஸார் , சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி , மற்றும் , கொலை செய்யும் போது உடுத்தியிருந்த சாரம் என்பவற்றை குறித்த வீட்டின் கிணற்றில் இருந்து பொலிஸார் மீட்டு இருந்தனர். 

அதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முடிவடைந்த நிலையிலும் மன்றினால் வழங்கப்பட்ட 48 மணிநேர அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபரை முற்படுத்தினர். 

அதனை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

No comments