ஆடுகளை கடத்தி சென்றவர் 50 ஆயிரம் இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நிலையில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது


சட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்தி சென்றவர் , பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு உரிய அனுமதிகள் இன்றி லொறி ஒன்றில் ஆடுகளை நபர் ஒருவர் கடத்தி செல்லும் போது , சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸார் வாகனத்தினை மறித்து சோதனையிட்டனர். 

அதன் போது உரிய அனுமதிகள் இன்றி ஆடுகளை சித்திரவதை செய்யும் முகமாக கடத்தி செல்லப்படுவதனை அறிந்து பொலிஸார் வாகன சாரதியை கைது செய்தனர். 

கைதில் இருந்து தப்பிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பொலிஸாருக்கு கொடுக்க முற்பட்டுள்ளார். அதனை வாங்க மறுத்த பொலிஸார் , கடமையில் இருந்த பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டார் எனும் குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 

அண்மை காலமாக யாழ்ப்பாண பிரதேசங்களில் கால்நடைகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது. மேய்ச்சல்களுக்கு செல்லும் கால் நடைகளை சிலர் கடத்தி செல்கின்றனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத்தின் வழிகாட்டலில் வீதி சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments