கனடாவில் இருந்து இந்தியாவில் உள்ளவர் ஊடாக அனலைதீவுக்கு கூலிப்படையை ஏவி தாக்குதல்!


கனடாவில் வசிக்கும் நபர் இந்தியாவில் உள்ள நபர் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள கூலிப்படை மூலம் அனலைதீவு பகுதியில் தாக்குதல் நடாத்தியுள்ள சம்பவம் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அனலைதீவில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வயோதிப தம்பதியினர் உள்ளிட்ட மூவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வயோதிப தம்பதிகளின் ஆவணங்கள் , நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றது. 

பாதிக்கப்பட்ட வயோதிப தம்பதியினர் கனடாவில் இருந்து அனலைதீவில் உள்ள தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன் பூர்வீக வீட்டில் இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்று இருந்தது. 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை இரவு வேளை படகொன்றில் அனலைதீவு பகுதியில் வந்து இறங்கிய கொள்ளை கும்பலே தாக்குதலை நடாத்தி விட்டு , கொள்ளையடித்து படகில் தப்பி சென்றது என கண்டறியப்பட்டது. 

அதனை தொடர்ந்து விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்திய வேளை , கடந்த மாதம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். குறித்த இளைஞனிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறையை சேர்ந்த 32 வயதான பிரதான சந்தேக நபரையும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 24 வயதான சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர். 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , கனடாவில் இருந்து இந்தியாவில் உள்ள நபரை தொடர்ந்து கொண்டு அவர் ஊடாக கஅனலைதீவில் வசிக்கும் வயோதிப தம்பதியினரை தாக்குமாறு கூறப்பட்டது. 

அதனை அடுத்து நாம் வேலணை பகுதிக்கு சென்று அங்கு படகொன்றினை வாடகைக்கு அமர்த்தி அனலைதீவில் தரையிறங்கி அவர்களின் வீட்டுக்கு சென்று தாக்குதல் நடாத்தி , கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்து படகில் தப்பி யாழ்ப்பாணம் வந்தடைந்தோம் என விசாரணைகளில் முதன்மை சந்தேக நபர் கூறியுள்ளார். 

அதேவேளை சந்தேக நபர்களிடம் இருந்து வயோதிப தம்பதியினரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நாய்களில் தங்க வளையல்கள் மற்றும் மோதிரம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வீட்டில் இருந்து  4 பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 4 வலையல்கள் உள்ளிட்ட நகைகள் என சுமார்13 லட்சம் பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments