கச்சம் சரணமல்ல:இது கச்சதீவு புத்தர்!



கத்தோலிக்கர்களால் கொண்டாடப்படும் கச்சதீவில் முளைத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.ஏற்கனவே கடற்படையினர் வசமுள்ள பாலைதீவு முதல் கக்கடதீவு வரை அண்மை நாட்களில் புத்தர்சிலைகள் முளைத்துள்ளன.

இதனிடையே கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்;.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

கச்சத்தீவு இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. இந்தியாவின் ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

கடந்த 3,4ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெற்றபோது. தமிழ்நாட்டில் இருந்து 2281 பேரும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருகின்றன. படையினரால் கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே இருக்கின்றது .இதனை உடனடியாக அகற்ற வேண்டும். கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று பதில் வரலாம் கச்சத்தீவு திருவிழாவின் போது கடற்படையினரின் விருந்தினர்களுக்கே முன்னிலை வழங்கப்பட்டதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments