மதவாதமும் மொழிவாதமும் இனவாதத்துடன் போட்டி! பனங்காட்டான்
கத்தோலிக்கர்களின் புனித தலமான கச்சதீவில் குட்டிப் புத்தர் அரசங்கன்றுடன் முளைக்கிறார். இஸ்லாமியர்களின் மத்ரஸா பாடசாலைகளை தடைசெய்ய வேண்டுமென்கிறார் முன்னாள் கடற்படைத் தளபதி. இந்துக்களின் மத அடையாளங்கள் தமிழர் தாயகத்தில் ஷசட்டப்படி| அழிக்கப்படுகின்றன.
இலங்கை மக்கள் இருட்டினில் மட்டுமன்றி பசியுடனும் வாழப் பழக வேண்டுமென்று ஒன்பது மாதங்களுக்கு முன்னர் கூறப்பட்ட வேளையில், அதனைத் தன்னால் மாற்ற முடியுமென்ற அசட்டுத் துணிச்சலுடன் ஜனாதிபதியாகிய ரணில் விக்கிரமசிங்க தமது முதலாவது கண்டத்தைத் தாண்டியுள்ளார்.
இவரை ஜனாதிபதி கதிரைக்குக் கொண்டு வந்த ஷவெள்ளை| நாடுகளின் ஆசீர்வாதமும், அவர்களின் ஆதரவில் இயங்கும் சர்வதேச நாணய நிதியம் தாராளமாக வழங்கியுள்ள பங்களிப்பும் இவரை நெஞ்சை நிமிர்த்தி தோள்களை உயர்த்தி தலைதூக்க வைத்துள்ளது.
ஆட்சியிலிருந்து பதவி துறந்தவர்களையும், நாட்டைவிட்டு ஓடிப்போனவர்களையும் ஒரு தடவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ரணில் என்றும் சொல்லலாம். நான்கு வருடங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 333 மில்லியன் அமெரிக்கன் டாலர் இப்போது கிடைத்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த மக்களுக்கு வயிறு குளிர வைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம். இந்தக் கடனுக்காக பல நிபந்தனைகளை ரணில் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களிலும் மாதங்களிலும் வெவ்வேறு விதமான வரிகளை முதற்தடவையாக மக்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.
இருப்பினும், இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து சற்று விடுதலை பெறவும், இறக்குமதிகளை தாமதமின்றி மேற்கொள்ளவும், மேலும் பல நாடுகளிலிருந்து உதவி பெறவும் சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கதவுகளை திறந்து விட்டிருப்பதால் எதிர்கட்சியினருக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ரணிலைப் பாராட்டியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டை சர்வதேசத்துக்கு அடகு வைக்க வேண்டாமென்று எச்சரித்து வந்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ரணிலைப் பாராட்டியுள்ளார். அரசியல் ரீதியாக கருத்து வேற்றுமை இருந்தாலும் ரணிலின் வெற்றிக்கு பாராட்டுக் கூறியுள்ளார்.
எதிர்கட்சியின் பொருளாதார வல்லுனர் என வர்ணிக்கப்படும் ஹர்~ டி சில்வாவும் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பங்குக்கு பாராட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தை எதிர்ப்பவர்களை நாட்டின் எதிரிகள் (துரோகிகள் என்று சொல்லவில்லை) என்று சாடியுள்ளார் எதிர்கட்சியின் சுயாதீன எம்.பியான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
நெஞ்சுக்குள் ஒன்றை மறைத்துக் கொண்டு இவர்கள் வழங்கிய பாராட்டை ஷவஞ்சகப் புகழ்ச்சி| என்றுதான் கூறவேண்டும். கிடைத்துள்ள நிதி உதவியை மூலாதாரமாகப் பயன்படுத்தி வரப்போகின்ற அத்தனை தேர்தல்களிலும் ரணில் தலைமையிலான அணி வெற்றி பெறும் என்ற அச்சம் இவர்களிடம் உண்டு. ஆனாலும், பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு அவப்பெயர் வராமல் தடுக்கவே ரணிலை பாராட்டும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஒருபுறத்தில் பாராட்டைத் தெரிவித்திருக்கும் இவர்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கத்தையும், ஒரு வரிகளைக்கூட மறைக்காமல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வேண்டி வருவதிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.
1970ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 45 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஐந்து தடவைகள் பிரதமராக பதவிகளை வகித்த ரணில் ஒருமுறைகூட ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாதுபோன ஷராசியில்லாத ராசா|.
கடந்த பொதுத்தேர்தலில் தாம் தோல்வி கண்டது மட்டுமன்றி தமது ஐக்கிய தேசிய கட்சிக்கும் படுதோல்வியை பெற்றுக் கொடுத்தவர் இவர். பிரித்தானியர் நாட்டைவிட்டு போனபின்னர் உருவான முதலாவது அரசாங்கத்தின் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சி முதன்முறையாக ரணில் தலைமையில்தான் படுதோல்வி கண்டது. இதற்குக் காரணம் ராஜபக்சக்கள் உருவாக்கிய பொதுஜன பெரமுன அல்ல. ஐக்கிய தேசிய கட்சியை உடைத்துக் கொண்டு பெரும்பான்மையினரை தம்மோடு இணைத்துக் கொண்டு புதிய கட்சியை உருவாக்கிய சஜித் பிரேமதாசவே முக்கிய காரணம்.
கடந்த பொதுத்தேர்தலில் இவரது கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியல் ஆசனமொன்று கிடைத்தது. பத்து மாதங்கள் பொறுத்திருந்து, 2021 யூன் 23ம் திகதி ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு தேசிய பட்டியலே வழிவகுத்தது. அவ்வேளை, தமது எதிர்காலம் பற்றி பெரியளவில் கனவு கண்டிருக்க மாட்டார்.
2022 மே 31ம் திகதி உருவான அறகலய, மே மாதம் 9ம் திகதி மகிந்தவையும், யூன் 9ம் திகதி பசிலையும் அவரவர் பதவிகளிலிருந்து வெளியேற வைத்தது. யூலை 9ம் திகதி நாட்டை விட்டுத் தப்பியோடிய கோதபாய ராஜபக்ச வெளிநாட்டிலிருந்தவாறு தமது பதவியை துறந்ததையடுத்து யூலை 13ல் ரணில் தற்காலிக ஜனாதிபதியானார். 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். முதன்முதலாக நாடாளுமன்றத்தால் தெரிவான ஜனாதிபதியானவர் இவரே.
கடந்த ஒன்பது மாதங்களில் ஒருபோதுமே பின்கதவு வழியாக இவர் நியமனங்களைப் பெறவில்லை. இலங்கை அரசியல் யாப்பின்படியே எம்.பியாகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி - இப்போது தமது ஆயுட்காலம் முழுவதும் அப்பதவியை வகிப்பதற்கு ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது எதிர்கட்சித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவை ஜனநாயக நியமங்களுக்கு உட்பட்ட வகையில் அப்பதவியை ஏற்குமாறு கோதபாய கேட்டார். அச்சம் காரணமாக சஜித் மறுத்ததால் இப்பதவி ரணிலை நாடிச் சென்றது.
இப்போது அரசியல் காற்று வீசும் முறைமையைப் பார்க்கும்போது, ரணிலுக்குத் தேவையான பிராண வாயு போதியளவு கிடைத்து வருவது தெரிகிறது. சர்வதேச நாணய நிதியமே இதன் பிரதானி.
இது தொடர்பாக இரண்டு கருத்துகள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை வங்குரோத்து நிலைக்குச் செல்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது. அவ்வேளையில் நிதி அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்ச சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுமாறு ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவிடம் தெரிவித்தபோது கோதபாய அதனை உதாசீனம் செய்ததாக அவரது அணியினர் சொல்கின்றனர். ஆதலால் இப்போது ரணிலுக்குக் கிடைத்த நிதி உதவிக்கு பசிலே வழிகாட்டியதாகக் கூறி அந்த வெற்றியை ரணிலிடம் இருந்து பறிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மறுதரப்பில், ரணிலின் சோதிட நம்பிக்கை பற்றி சஜித் பிரேமதாச வெளியிட்ட சுவைமிகு தகவல் ஒன்று பல மட்டங்களிலும் விமர்சிக்கப்படுகிறது. தமது தந்தை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த நாளான யூன் 23ம் திகதியை நல்வாய்ப்பு நாளென சோதிடம் பார்த்து, அந்தத் திகதியில் தேசிய பட்டியல் எம்.பியாக ரணில் பதவி ஏற்றதனாலேயே அவருக்கு சர்வதேச நாணய நிதி கிடைத்துள்ளது என்று சஜித் கூறியிருப்பது இந்த வருடத்துக்கான உச்ச நகைச்சுவை.
1989ல் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணசிங்க பிரேமதாச, பிரதமர் பதவிக்கு தகுதியானவர் எனவும், ஜே.ஆரின் வாரிசு எனவும் எதிர்பார்க்கப்பட்ட ரணிலை ஓரந்தள்ளிவிட்டு, அப்பதவிக்கு சப்பாணி அரசியல்வாதியான தபால் அமைச்சர் டி.பி.விஜேதுங்கவை நியமித்தார். பிரேமதாசவின் அகால மரணத்தின் பின்னர் ஜனாதிபதியான டி.பி.விஜேதுங்க, ஜே.ஆருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ரணிலை பிரதமராக்கியதே வரலாறு. இதனைத் தெரிந்திராத சஜித், தமது தந்தையின் பிறந்த நாளை ரணில் தமக்கான நல்வாய்ப்பு நாளாக பார்த்ததாகக் கூறியது, எந்தவகையிலும் ஒப்புடமையானது அல்ல.
அதேசமயம் சஜித்தின் இந்தக் கூற்று, ரணிலை இனி அசைக்க முடியாத ஒரு தலைவராக அவர் நோக்குவதை வெளிப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.
உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான எதிர்காலம், 13ம் அரசியலமைப்பு என்னவாகுமென்ற எதிர்பார்ப்பு என்பவைகளை மறக்கடிக்க வைக்கும் சூழலை பொருளாதார சீரமைப்பு ஏற்படுத்தி வருகிறது. இதற்கூடாகவும், உள்ளூராட்சி தேர்தல் நடத்த வேண்டுமென வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து சஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனப்பிரச்சனைத் தீர்வு, போர்க்குற்றத்துக்கான பொறுப்புக்கூறல், சர்வதேச பொறிமுறையுடனான நீதி விசாரணைகள் பற்றி ஜெனிவாவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போதும், தமிழ் மக்கள் கேட்கும்போதும் நாட்டின் இறையாண்மையை முன்னிறுத்தி எதிர்ப்புக் காட்டுவது சிங்கள அரசியல்வாதிகளின் தொடர் செயற்பாடு. ஆனால், உள்நாட்டில் - அதிலும் அடிமட்டமான உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த ரணில் அரசுக்கு நெருக்கடி கொடுக்குமாறு வெளிநாட்டுத் தூதுவர்களை கேட்கும்போது தங்களின் இறையாண்மைக்கு என்னாச்சு என்று இவர்கள் நினைப்பதில்லையா?
ஜெனிவா அரங்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டது போன்று மதவாதம் என்பது இப்போது நாட்டில் தலைவிரித்தாடுகிறது. இந்துக்கள் மட்டுமன்றி கத்தோலிக்கர்களும் இஸ்லாமியர்களும்கூட இப்போது பாதிக்கப்படுகின்றனர். கத்தோலிக்கர்களின் புனித தலமான கச்சை தீவில் குட்டி புத்தர் அரசங்கன்றுடன் முளைக்கிறார். மத்ரஸா பாடசாலைகளை தடைசெய்ய வேண்டுமென்கிறார் முன்னாள் கடற்படை தளபதியான இந்நாள் எம்.பி. சரத் வீரசேகர.
பொருளாதாரத்தை மீட்பதாக ரணிலின் அரசாட்சி சிங்கள தேசத்தை முழுமையாக கையகப்படுத்தும் வேளையில் இனவாதத்தை விஞ்சியதாக மதவாதமும் மொழிவாதமும் வேகமெடுக்கிறது. இது சகல சிறுபான்மை இனங்களின் எதிர்காலத்தையும் கேள்வி நிலைக்குள் தள்ளுகிறது.
Post a Comment