யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர்!




யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம்  எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்கான வர்தமான அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம், யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ. ஆனோர்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

அவரது நியமனம் குறித்த கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் தனது 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெடின் முதலாவது சமர்ப்பிப்பிப்பைக் கடந்த 14 ஆம் திகதி நடாத்தியிருந்தார். 

அந்த பட்ஜெட் சமர்ப்பிப்பு உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. 

அதன் பின் பட்ஜெட்டின் இரண்டாவது வாக்கெடுப்பு நேற்றைய தினம்  இடம்பெற்றது. 

அந்த வாக்கெடுப்பிலும் ஆர்னோல்ட் சமர்ப்பித்த பட்ஜெட் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகினார்.

நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக் காலம் 2022 மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், உள்ளூராட்சி சபைகள் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி மேலும் ஒரு வருட காலத்துக்கு - எதிர்வரும் மார்ச் 19 வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments