சுவிசு நாட்டினுள் பயணிக்கும் ஈருறுளிப் போராட்டம்!

13 நாளாக (01/03/2023) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப் போராட்டம்  சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது.

கடந்த 17/02/2023 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் சந்திப்புக்களை மேற்கொண்டு எமது கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது. சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு தொடருகின்ற இப்போராட்டம் பிரித்தானியா, நெதர்லாந்து,பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டு வெளி நாட்டமைச்சு , தெற்காசிய பசுபிக் பிராந்திய பொறுப்பதிகாரி , ஐரோப்பிய ஒன்றியத் தலைவரின் செயலாளர், ஐரோப்பிய ஆலோசனை அவை உறுப்பினர், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்…  போன்றவர்களை மனிதநேய ஈருருளிப்பயணிகள் சந்தித்திருந்தனர்.  

01/03/2023 காலை அகவணக்கத்தோடு  ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம்

இன்று  பிரான்சில் முல்கவுசு, சான் லூயி, நகரசபைகளிலும்  தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது,

ஐக்கிய நாடுகள் அவையிலும் பாதுகாப்பு சபையிலும் சம நேரத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பிரான்சு நாடும் மிக முக்கியமானது. எனவே பல்லின வாழ் மக்களின் சக்தியோடும் ஊடகங்களின் முக்கியத்துவத்தோடும் பிரான்சு நாட்டு மக்களான தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு பிரான்சு நாட்டினைச் செவிசாய்க்க வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.  

அதற்கேற்ப நாமும் எமது அறவழிப்போராட்டங்களாலேயே எம்முடைய நியாயமான கோரிக்கையினை செவிமடுக்க வைக்கமுடியும்.

அறவழி ஈருருளிப்பயணத்தின் மூலம் வலுவான அரசியற் செய்தியினை நேற்று 28/02/2023 கொல்மார் , இச்சேனைம் , செர்னை நகரசபைகளில் முதல்வர்கள், மேற்சபை உறுப்பினர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மனித நேய செயற்பாட்டாளர்களை இன்முகத்தோடு வரவேற்றது மட்டுமல்லாமல் பன்னெடுந்தூரம் சுமந்து  வந்த நியாயமான கோரிக்கைகளினை தாம் வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் பிரான்சு அரச அதிபரிடமும் சமர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி தந்து ஊக்குவித்தனர். நகரசபை முதல்வர்கள் தம் முகநூல் பக்கங்களிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் சார்ந்த பதிவுகளை பதிவுசெய்து தம் ஆதரவினைத் தெரிவித்தனர்.

13ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசு நாட்டினை வந்தடைந்தது.

மாலை 17 மணிப்பொழுதில் சுவிசு நாட்டினுடைய எல்லை மாநகரமான பாசல் எனும் இடத்தில் தமிழீழ மக்கள் மற்றும் சுவிசு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் வரவேற்போடு எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். எதிர் வரும் திங்கட் கிழமை 06/03/2023 திகதி அன்று 14மணிக்கு ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் தமிழீழ மக்களின் நீதிக்காகவும் விடுதலைக்கும் நடக்க இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ள இருக்கின்றது. எனவே அனைத்து மக்களும் உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற வாருங்கள்.

No comments