முன்னணிக்கு தடை:பல்கலை சமூகமும் எதிர்ப்பில்!

 


தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்;கு தீர்வு இதுவரை காலமும் வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்  இரண்டாவது தடவையாக தேவையில்லையென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

அதேவேளை தமது எதிர்;ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் பொழுதே பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியின் பொங்கல் தின வருகையினை முன்னிட்டு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதிநிதிகளது வருகையுடன் யாழ்நகரில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள எதிர்ப்பு போராட்ட அழைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கோரிக்கையின் பேரில் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக காவல்; நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். அவரது அழைப்பின் பேரில் இந்திய ஆளும் தரப்பு பிரதிநிதிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இலங்கை காவல்துறையினர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தடை உத்தரவு கோரப்பட்டது.


No comments