ஓங்கி ஒலித்த குரல்!



ஈழத்தமிழர்கள் மரபுவழித்தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதன் அடிப்படையிலும் வட்டுக்கோட்டைத்தீர்மானம், திம்புக்கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் ஆகியவற்றின் நீட்சியாக புதிய பிரகடனமாக இன்று மட்டக்களப்பு பிரகடனமும் அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகள் ஏற்கனவே கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஈழத்தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வு இதுவரை எட்டப்படவில்லையென்பதால் அந்த அடைவை எட்டுவதற்காக மீண்டும் ஒருதடவை பிரகடனம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.  

இன்று  பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோமென மாணவ தலைவர்கள் அறிவித்துள்ளனர்..

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி இடம்பெற்ற மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதி நாள் செவ்வாய்கிழமை பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்திருந்தனர்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி இறுதி நாள் நிகழ்வுக்கு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட மக்கள் மிகவும் அமோக ஆதரவு வழங்கியிருந்தனர்..

பேரணியில் கட்சி வேறுபாடுகள் மத வேறுபாடுகளுக்கு அப்பால் கிறிஸ்தவ இந்து மத தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பல பிரதிகளும் கலந்து கொண்டிருந்தனர்

பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பிரதேச சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்ட வர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் தமிழர்களது நிலைப்பாட்டை வலியுறுத்தும் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.


No comments