மாந்தை மேற்கில் அரச காணிக்குள் சட்டவிரோத மணல் அகழ்வு ; பொலிஸார் பாராமுகம் என குற்றச்சாட்டு
நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள போது, நீதிமன்றினை அவமதிக்கும் வகையில் அரச காணியில் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்ந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் , பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை கள்ளியடி வீதி பகுதியில் உள்ள காணி ஒன்றினுள், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அரச உத்தியோகஸ்தர் ஒருவர் மண் அகழ்ந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.

குறித்த மண் அகழ்வினால் தமது பிரதேச வளங்கள் அழிக்கப்படுவதாக ஆத்திமோட்டை கிராம மக்கள் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். 

அதனை அடுத்து மாவட்ட நில அளவை திணைக்களத்தினால் குறித்த காணி அளவீடு செய்யப்பட்டு, அது அரச காணி என  உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் ,அரச காணிக்குள் அத்துமீறி நுழைந்தமை , காணியில் மண் அகழ்வினை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அந்நிலையிலும் குறித்த காணிக்குள் இருந்து 50க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களில் மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.

 நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றை அவமதிக்கும் விதமாக நடைபெறும் மண் அகழ்வினை நிறுத்துமாறு ,  மாந்தை மேற்கு பிரதேச செயலாளரினால் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும்  பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அதேவேளை அரச காணிக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகஸ்தருக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் , அந்த அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தியே அப்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் , பொலிஸார் அவை தொடர்பில் கவனத்தில் எடுக்காது , அவரது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

No comments