தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் "தல்செவன" விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த "திருகோண சத்திரம்" எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான  கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும். 

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். 

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு  வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம் என தெரிவித்தார்.

No comments