அனலைதீவில் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு ; 3 ஆயிரம் அமெரிக்க டொலர் உள்ளிட்டவையும் கொள்ளை


யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பத்தினர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, 3 ஆயிரம் அமெரிக்கன் டொலர் உட்பட அவர்களின் உடமைகளை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. 

கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று , அனலைதீவில் உள்ள தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன் , கணவன் , மனைவி இருவரும் அனலைதீவில் தமது வீட்டில் தங்கியிருந்து புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களின் வீட்டினுள் நுழைந்த நால்வர் அடங்கிய முக மூடி கொள்ளை கும்பல் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , 3 ஆயிரம் அமெரிக்க டொலர் , கடவுச்சீட்டுக்கள் , உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் படகு மூலம் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments