தமிழரசுத் தலைவர் மாவை தலைமையில் தமிழரசு இல்லாத புதிய கூட்டமைப்பு? பனங்காட்டான்


சம்பந்தனின் இயக்கமற்ற நிலையாலும் சுமந்திரனின் சுயஇச்சையான முடிவுகளாலும் இடறுப்பட்டு வெளியேறிய கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிகளும், இந்நாள் பங்காளிகளும் புதிய கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைவராக மாவை சேனாதிராஜவை உள்வாங்க முனைவதால் தமிழர் பிரச்சனையை எந்தளவுக்குத் தீர்க்க வாய்ப்புக் கிடைக்கும். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை விரைவில் பறிகொடுக்க இருக்கும் மாவையருக்கு புதிய தலைமைப் பதவியொன்று தேவைப்படுகிறதா?

2022ம் ஆண்டு 'ஒருவாறு|'விடைபெற்றுப் போய்விட்டது. ஆனால், இலங்கை அரசியலில் பல தடங்களை அழிக்க முடியாதவாறு பதிவிட்டுள்ளது. 

தமிழில் சண்டமாருதம் என்றொரு வார்த்தையுண்டு. கடந்த ஆண்டின் அரசியல் இடிபாடுகள், பதவி பறிப்புகள், பதவி துறப்புகள், கழுத்தறுப்புகள் என்பவற்றை சண்டமாருத அரசியல் என்று சொல்வதே பொருத்தம். 

கடந்த மார்ச் மாதத்தில் ஷகோதா கோ ஹோம்| (கோதா வீட்டுக்குப் போ) என்று ஆரம்பமான மக்கள் பேரெழுச்சி, காலிமுகத் திடலை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் பரவியது. 

ராஜபக்ச குடும்பத்தை வேரோடு ஆதிக்க அரசியல் பதவிகளிலிருந்து இப்போராட்டம் அப்புறப்படுத்தியது. 65 லட்சம் மக்களால் தெரிவான ஜனாதிபதி ஒருவரை நாட்டைவிட்டு தப்பியோடச் செய்து, வெளியிலிருந்தவாறு பதவி துறக்கவும் வைத்தது. 

மக்களால் நிராகரிக்கப்பட்ட 45 வருடகால அரசியல் அனுபவ ரணிலை பிரதமராக்கி, ஜனாதிபதியாக்கியதும் இதே போராட்டம்தான். முன்னர், இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி கண்டவர் ரணில். பின்னரான இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வி அச்சத்தால் போட்டியிடாது, தமது கட்சியின் சார்பில் வேறு இருவரை (சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன) போட்டிக்கு நிறுத்திய அசாதாரண அரசியல்வாதியும் ரணில்தான். 

அரசாங்க ஊழியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தும் ரணில், தமது 72 வயதில்தான் முதல்முறையாக ஜனாதிபதியானார் என்றால், இதற்குப் பெயர் 'ஜனநாயக சோசலிஸ அரசியல்'. 

இவ்விடயத்தில் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும், இவரது பெறாமகனான ரணிலுக்கும் ஓர் ஒற்றுமையுண்டு. இருவருமே தங்களின் 72வது வயதில்தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பைப் பெற்றனர். அதற்காக ஜெயவர்த்தன போன்று 11 ஆண்டுகள் (1978 - 1989) ரணிலும் ஜனாதிபதியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று சொல்ல முடியாது. 

இருப்பினும், 2025ல் அல்லது அதற்கு முன்னர் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நேரடியாகத் தெரிவான ஜனாதிபதியாக வேண்டுமென்ற விருப்பில் அரசியல் சதுரங்க விளையாட்டில் அவர் இறங்கியுள்ளார். 

நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தி, சின்னாபின்னமாக்கி ஒன்றுடனொன்றை மோதவிட்டு, அதற்கூடாக அறுவடைகளை மேற்கொண்டு தம்மைப் பலப்படுத்துவது இவரது கலை. 

சிறுபான்மையினர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்பவராக சர்வதேசத்துக்குக் காட்டியவாறு, அதற்குள் ஆதாயம் தேடி தமிழர் அரசியல் அணிகளை மோதவிடுவது இவரது சமகால இலக்கு. 

இப்போதுள்ள அரசியல் நெருக்கடியில் மகிந்த-பசில் தலைமையிலுள்ள பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை களமிறக்கும் காலநிலையில் இல்லை. அதேசமயம், சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் அணியின் கை ஓங்கக் கூடாது என்பதிலும் இவர்களுக்கு அதீத அக்கறை. இதனால் வேறு வழியின்றி இப்போதைக்கு ரiணிலை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க வேண்டிய கையறு நிலைக்கு பெரமுன தள்ளப்பட்டுள்ளது. 

எவரையும் விரும்பியவாறு அமைச்சரவையில் ரணில் சேர்க்கலாமென மகிந்த கூறுவதும், ரணில் நாட்டுக்குரிய நல்ல தலைவரென்று நற்சான்று தெரிவித்துவிட்டு கோதபாய குடும்பத்தோடு நாட்டைவிட்டு சென்றிருப்பதும், ரணிலின் அரசியல் செயற்பாடுகளை வரவேற்கின்ற அதேசமயம் அமைச்சர் பதவி தமக்குத் தேவையில்லையென்று நாமல் ராஜபக்ச அறிவித்து வருவதும் - பெரமுனவின் எதிர்கால அரசியல் அரங்குக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள். 

ரணில் ஜனாதிபதியாகிய பின்னர் தமிழர் தரப்பு அரசியல்களம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இதனை ஷபரிதாபநிலை| என்று ஒரு வார்த்தையில் கூறிவிடலாம். தமிழர் பிரச்சனையை இரண்டு கூறுகளாக பிரித்துள்ள ரணில், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் - காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் - அரசியல் கைதிகள் விடுதலை போன்றவைகளை ஒரு கூறாகவும், இனப்பிரச்சனைக்கான தீர்வை இன்னொரு கூறாகவும் அடையாளப்படுத்தியுள்ளார். போர்க்குற்ற விசாரணையையும்  பொறுப்புக்கூறலையும் நாசூக்காக அப்புறப்படுத்திவிட இது சாதுரியமான செயல். 

அடையாளப்படுத்தப்பட்ட இரு கூறுகளுக்கும் அடுத்த மாத சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வுகாண வேண்டுமென அறிவித்துவிட்டு தமிழர் தரப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். தமிழர் தேசிய கட்சிகள் இவ்விடயத்தில் மூன்று பிரிவாக தம்மை வெளிக்காட்டியுள்ளன. சம்பந்தனின் கூட்டமைப்பு பேசித் தீர்க்கலாமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது. சி.வி.விக்னேஸ்வரனின் மக்கள் கூட்டணி முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை முன்வைத்து நிற்கிறது. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக இப்பேச்சுவார்த்தையை ஒதுக்கியுள்ளது. 

டிசம்பர் 13ம் திகதி சர்வகட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, பின்னர் சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனை உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தையென்று ஜனாதிபதி செயலகம் மழுப்பியுள்ளது. 

அடுத்த பேச்சுவார்த்தை இ;ந்த மாதம் 5ம் திகதியென்றும் அதனைத் தொடர்ந்து பத்தாம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து பேச்சு இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை எந்தெந்த அடிப்படையில் இடம்பெற வேண்டுமென புலம்பெயர் அமைப்புகள் சில அறிக்கையூடாக வெளிப்படுத்தியுள்ளன. பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழரும் இடம்பெற வேண்டுமென அமெரிக்காவிலுள்ள தமிழர் அமைப்பொன்று சம்பந்தனிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. 

இது ஒருபுறமிருக்க, புதிய கூட்டமைப்பொன்று (கூட்டமைப்பு இலக்கம் - 2) பற்றிய விடயம் இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. விக்னேஸ்வரனுடைய யாழ்ப்பாண இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இதில் சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா ஆகியோருடன் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றினார். முன்னையவர்கள் மூவரும் ஏற்கனவே கூட்டமைப்பின் பங்காளிகளாகவிருந்து வெளியேறியவர்கள். 

மாவை சேனாதிராஜா தனி நபரல்ல. சிறை சென்ற செம்மல் என்று பெயர் கொண்ட தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர். ஏற்கனவே பல தடவை இவ்வாறான பிரச்சனைக்குரிய கூட்டங்களை நடத்தியும் பங்குபற்றியும், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தவர். இதனால் இவரை ஷகட்டாக்காலி| அரசியல்வாதியென்று தமிழரசுப் பிரமுகர் ஒருவர் பட்டம் சூட்டியது ஞாபகமிருக்கிறது. 

இப்போது விடயம் அதற்கும் அப்பாற் சென்றுவிட்டது. மாவை தலைமையில் ஒரு கூட்டமைப்பில் தாங்கள் இயங்கத் தயார் என்று விக்னேஸ்வரன் அறிவிக்க, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதனை ஆதரித்து கருத்து வெளியிட்டார். கூட்டமைப்பிலிருந்து முன்னர் வெளியேறியவர்களையும் தற்போது கூட்டமைப்பில் பங்காளிகளாக இருப்பவர்களையும் புதிய கூட்டாக்கி அதற்கு மாவையர் தலைமை தாங்குவதென்பது இன்றைய சூழலில் அதிரடி வைத்தியம் போன்றது. 

சுமந்திரனின் சுயஇச்சையில் இயங்கிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பை ஒதுக்கிவிட்டு புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதே விக்னேஸ்வரனின் கூட்டத்தில் பங்குபற்றியவர்களின் பிரதான இலக்கு. முக்கியமாக விரைவில் நடைபெறவிருக்கும் தமிழரசின் மாநாட்டில் மாவையின் தலைமைப் பதவி பறிக்கப்படலாhமென்பது நிச்சயமாகிவிட்டது. தலைமைப் பதவி விடயத்தில் சிறீதரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் மௌனயுத்தம் நடைபெறுகிறது. கிழக்கின் வாக்குகளை தம்பக்கமாக்க சாணக்கியனின் தோள்களில் கைகளைப் போட்டவாறு சுமந்திரன் இதற்காகவே கிழக்கு மண்ணில் அலைந்து திரிகிறார். 

தமிழரசுத் தலைமை பதவி போனபின்னர் தமது எதிர்கால அரசியலுக்கு இன்னொரு பதவி மாவையருக்குத் தேவைப்படுகிறது. முக்கியமாக உள்;ராட்சிச் சபைகளின் தேர்தல், மாகாண சபைத் தேர்தலின்போது தமது இருப்பை வெளிக்காட்ட மாவையர் தலைமைப் பதவியொன்றை நாடுவது தவிர்க்க முடியாதது. இதனை நன்கறிந்த சுமந்திரன் முளையிலேயே அதனைக் கிள்ளிவிட முனைகிறார். 

கூட்டமைப்பில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்வதில்லையென அதன் அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக ஓர் அறிவிப்பை சுமந்திரன் வெளியிட்டார். இதற்கான பதிலடி மறுநாளே அரசியல் குழுவின் மற்றொரு உறுப்பினரான பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜாவிடமிருந்து வந்தது. சுமந்திரன் கூறியது போன்று அப்படியான முடிவெதுவும் அரசியல் குழுவில் எடுக்கப்படவில்லையெனவும், உண்மைக்குப் புறம்பாக சுமந்திரன் தெரிவித்துள்ளாரென்றும் அறிவித்து சுமந்திரனின் பொய்ப் பரப்புரைக்கு தவராஜா முடிவு கட்டியுள்ளார். 

இரண்டாவது கூட்டமைப்பின் உருவாக்கமென்பது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்கு சவாலாக அமையலாமென்ற அச்சம், சம்பந்தனின் வாரிசாக தம்மை உருவகப்படுத்தி வரும் சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது. அதனையே அவருடைய பொய் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், புதிய கூட்டமைப்பொன்றின் தலைமைப் பதவிக்கு மாவையர் பொருத்தமானவரா என்பதும் கேள்விக்குரியது. 

பொதுத் தேர்தலில் படுகுப்புற வீழ்;ந்து அரசியலில் நிர்வாணியாக நின்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாகலாம் என்றால், அவர் போன்று தேர்தலில் தோல்வியுற்ற தாமும் ஏன் தமிழ் கூட்டமைப்பொன்றின் தலைவராகி தமிழ்த் தேசிய அரசியலில் புத்தெழுச்சி பெற முடியாதென்று மாவை சேனாதிராஜா நினைக்கிறார் என்றால் அதில் தவறில்லை. 

'கலி' கால மாற்றமும், கலிகால அரசியலும் இணைந்தால் எதுவும் நடக்கலாம். இதனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு கிடைக்கும்?

No comments