அதிகாரிகள் ஆதரவில்லையாம்!



யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியாயமற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர், உள்ளூராட்சி ஆணையாளர் தன் தவறை நிவர்த்தி செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபைக்கான இடைக்கால முதல்வர் தெரிவுக்கான கூட்டம் கோரம் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சபை ஒத்திவைக்கப்பட்டமை முறையற்றது என ஆட்சேபித்து இன்றைய கூட்டத்தில் பங்குபற்றிய 20 உறுப்பினர்கள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு மீண்டும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான சபை அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை  வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

அதன்போது  45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.

மாநகர முதல்வர் தெரிவையோட்டி மாநகர சபை வளாகத்தில் இலங்கை காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ். மாநகர சபையின் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


No comments