யாழ்ப்பாணத்து மீற்றர் வட்டி:ஜவர் கைது!

 
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அவர்களின் முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளார் .

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

“கைது செய்யப்பட்ட முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் நாளாந்த மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி கூலிக்கு உதவியுள்ளார்.

நாளாந்த வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் ஒரு வாரத்துக்கு பணத்தையோ வட்டியையோ வழங்காவிடின் அவர்களை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்துவதை இந்தக் கும்பல் முன்னெடுத்துள்ளது.

சிறு முயற்சிகளில் ஈடுபடுவோர் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நாளாந்த வட்டிக்கு இந்தக் கும்பலிடம் பணத்தை வாங்கி பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் துன்புறுத்தப்பட்ட எவரும் முறைப்பாடு வழங்கவில்லை.

கைது செய்யப்பட்ட அனைவரும் காணொளி ஆதரத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments