தஞ்சமடைந்தவர்களின் மீன்கள் விற்பனை: கைதான சமாச தலைவருக்கு பிணை!


தஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. 

தமிழக மீனவர்கள் நால்வர் பயணித்த படகு இயந்திர கோளாறு காரணமாக கடந்த 29ஆம் திகதி வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் கரையொதுங்கியது. 

தமிழக மீனவர்களை பருத்தித்துறை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்ற வேளை தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன்களை அங்கு நின்று இருந்த ஒருவர் எடுத்து விற்பனை செய்திருந்தார். 

தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றத்தில் குறித்த நபரை கடந்த 30ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து, விசரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். 

வழக்கு விசாரணைகளை அடுத்து, நீதிமன்று அந்நபரை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் விடுவித்தது. 

அந்நிலையில் குறித்த நபர் விசாரணைகளின் போது , சமாச தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன்களை எடுத்து விற்பனை செய்தேன் என தெரிவித்ததன் அடிப்படையில் சமாச தலைவரை நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தினர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் சமாச தலைவரை 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் , தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் மன்று விடுவித்து , வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. 

அதேவேளை தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன்கள் பழுதடையும் நிலையில் காணப்பட்டமையால் , அதனை விற்பனை செய்து  அந்த பணத்தினை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கும் நோக்குடனேயே மீன்களை விற்பனை செய்ய சமாச தலைவர் அறிவுறுத்தினார் என சமாச தலைவரின் தரப்பினர் தெரிவித்தனர். 

No comments