சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்


தமிழக சட்டசபையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என இன்றைய தினம் வியாழக்கிழமை  தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சட்டசபையில் உரையாற்றும் போதே முதல்வர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய போது,

 “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெற செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது.

1860ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது.

அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திர சிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இதன் செயலாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்தார்கள்.

அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் மூலம் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2.7.2005 அன்று தொடங்கி வைத்தார்.

No comments