“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி”


இந்த வருட சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின விழாவை பெருமையாகவும் குறைந்த செலவிலும் நடத்தும் வகையில் கொண்டாட்டத்தை ஒன்றரை மணிநேரமாக மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“நமோ நமோ மாதா – நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பெருமை மிகு விழாவில், 2048 ஆம் ஆண்டு 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

தேசிய சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் பிரதான நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்தில் உள்ள தேசிய மாவீரர்களின் உருவச்சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் வைபவம் ஆரம்பமாகவுள்ளது.

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்

No comments