யாழ்.கல்வியங்காட்டில் வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கி கொள்ளை ; மூவர் கைது!


யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு , உரிமையாளரை வாளினால் வெட்டி காயங்களுக்கு உள்ளாகிய பின்னர் , வர்த்தக நிலையத்தில் இருந்த 5 இலட்ச ரூபாயினை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும், அதன் உரிமையாளர் மீதும், இனம் தெரியாத குழுவினர் கடந்த 18ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தி, ஐந்து லட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்று இருந்தனர். 

வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில், வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர். தாக்குதலில் வர்த்தக நிலையம் சேதமாக்கப்பட்டதுடன் , உரிமையாளரும் காயங்களுக்கு உள்ளானார். 

அத்துடன் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம்  ரூபா பணத்தினையும் கொள்ளையடித்து சென்றனர்.   

வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் , தடயவியல் பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை , யாழ்ப்பாணம் , கல்வியங்காடு மற்றும் கோப்பாய் பகுதிகளை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments