அடுத்து கப்பல் வருகிறதாம்!தென்னிந்தியாவிற்கும் இலங்கையில் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று (13) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் டி சில்வா தெரிவித்தார்.


யாழ் குடாநாட்டில் பெருமளவிலான இந்தியர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்து நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் எனவும், புத்தகாயா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


இதற்கிடையில் கப்பல் சேவையை தொடங்குவதற்கு முன்னர் துறைமுகங்களில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கப்பல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதன்படி, சுங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் தொடர்பான துறைமுகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் செயல்முறையின்படி தொடரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.


ஒரே நேரத்தில் 300 அல்லது 400 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல்கள் ஒரு பயணத்தை முடிக்க சுமார் மூன்றரை மணி நேரம் ஆகும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும் என்றும், அவர்கள் 100 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, கொழும்பில் இருந்து அமைச்சர் டி சில்வாவின் தேர்தல் தொகுதியான பதுளைக்கு விஜயம் செய்வதற்கு எடுக்கும் நேரத்தை விட இந்த படகு சேவை தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு குறைவான நேரத்தை எடுக்கும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


பொதுவாக கொழும்பில் இருந்து பதுளைக்கு பேருந்தில் பயணிக்க சுமார் 8 மணிநேரம் ஆகும்.


அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய, கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் தளபதி சேனக வஹல மற்றும் பயணிகள் கப்பல் உரிமையாளர்கள் குழுவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments