OMP:நாளை யாழில் சந்திப்பு

முல்லைதீவை தொடர்ந்து நாளை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அரச நிறுவனம் சந்திக்கவுள்ளது.அவ்வகையில் 240 குடும்ப பிரதிநிதிகள் நாளைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே முல்லைத்தீவு இராணுவ முகாமில் பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரையாவது இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமையை சட்டத்தரணிகளினால் வெற்றியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில், இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக் கண்டறியுமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்லையா விஸ்வநாதனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்துள்ளார். இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“மனுதாரரின் கணவர் இராணுவத்திடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இராணுவமே பொறுப்புக் கூற வேண்டும் என, மனுதாரருக்கு ஆதரவாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.”


இராணுவத்திடம் சரணடைந்த செல்லையா விஸ்வநாதனை அடுத்த வருடம் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இராணுவத் தளபதி மற்றும் 58ஆவது படைத் தளபதி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


“செல்லையா விஸ்வநாதன் என்ற நபரை இந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் இல்லையெனின் அவரை ஏன் முன்னிலைப்படுத்தவில்லை என்ற காரணத்தை மார்ச் 22ஆம் திகதி தெளிவுபடுத்த வேண்டுமென இலங்கை இராணுவத் தளபதி, 58ஆவது பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.”

செல்லையா விஸ்வநாதன் இராணுவத்தின் பிடியில் இருந்தபோதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல், நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என வலியுறுத்தியுள்ளார்.


“இது இந்தக் குடும்பங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி, இதற்கு இராணுவம்தான் பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருவரைப் பொறுப்பேற்று, பின்னர் அவர் தொடர்பில் ஒன்றும் தெரியாது எனக் கூறுவது அரசாங்க நிறுவனமான இராணுவத்திற்கு பெரிய பிரச்சினை.”


2018ஆம் ஆண்டு 58ஆவது படைப்பிரிவு மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு இராணுவ முகாமில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பட்டியல் இராணுவத்திடம் உள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார். ஆனால் அவர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.


பின்னர் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வழங்கிய ஆவணம் மாத்திரமே தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்த எவரும் பதிவு செய்யப்படவில்லையென கடந்த நவம்பரில் இலங்கை இராணுவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருந்தது.


 ஊடகவியலாளர் பி. நிரோஷ்குமார் மூன்று வருடங்களுக்கு முன்பு கோரிய தகவல் மறுப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவால் நவம்பர் 3 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


போரின் இறுதி நாட்களில், யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டனர்.


வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய அவர்களில் குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர்.


இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களா என்பது தமக்குத் தெரியாது எனக் கூறி தமிழ் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை இராணுவம் 2019ஆம் ஆண்டு நிராகரித்திருந்தது.


“போர் பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் விடுதலைப் புலிகளா அல்லது பொதுமக்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பொறுப்பேற்ற போது பதிவு செய்யவில்லை. “எங்களிடம் வந்தவர்களை பேரூந்துகளில் அழைத்துச் சென்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் முகாம்களில் தங்க வைத்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகம் அவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டது” என இராணுவத்தினர் சாட்சியமளித்தனர்.


இராணுவம் அளிக்கும் தகவல்கள், அரசாங்கம் அவ்வப்போது தெரிவித்து வரும் கருத்துகளுக்கு முரணாக அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது வெள்ளை கொடிகளை ஏந்திவந்த ஒரு குழுவை அப்போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதாக 2013ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதானப் பணியகத்தின் தலைவர் சிவரத்தினம் புலிதேவன் ஆகியோர் பொறுப்பேற்றவர்களில் அடங்குவதாக உள்ளுர் மற்றும் சர்வதேச ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ளன.


எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி 58ஆவது படைப்பிரிவினரால் நடேசனும் புலிதேவனும் கொல்லப்பட்டதாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டனர்.


அரசாங்கத்திடம் பாதுகாப்பு உத்தரவாதம் பெற்று வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்த நடேசன் மற்றும் புலிதேவன் கொலையை போர்க்குற்றம் என அறிவித்த ஐக்கிய நாடுகள் சபையும் பரணகம ஜனாதிபதி ஆணைக்குழுவும் சுதந்திரமான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.


வன்னி இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களால் நியூயோர்க்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணை நிரந்தரப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டமையால் அவருக்கு காணப்பட்ட இராஜதந்திர விலக்கு பாதுகாப்பு உத்தரவாதம் காரணமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

No comments