போதைக்கெதிரான விழிப்புணர்வு; யாழ். பல்கலை மாணவர்களுக்கு பரிசில்


 மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையுடன் இணைந்து முன்னெடுத்த மதுசார மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

“இளைஞர்கள் மத்தியில் மது மற்றும் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதில் திரைப்படங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, அதனைப் பலவீனப்படுத்தும் நோக்கில் இக்குறும்படப் போட்டி நடாத்தப்பட்டிருந்தது. இக் குறும்படப் போட்டிக்காக முப்பது குறும்படங்கள் மாணவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் எட்டு சிறந்த குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

இக்குறும்படப் போட்டியில் செல்வகுமார் ரினோஷன் முதலாம் இடத்தினைப் பெற்று ரூபா 50,000 பணப்பரிசினையும், டி.திஷான் தலைமையிலான குழுவில் டி. தவதேவன், என். நிரோஷாந், ஆர்.தர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடத்தினைப் பெற்று ரூபா 30, 000 பணப்பரிசினையும், ஆர்.பெனயா மூன்றாம் இடத்தினைப் பெற்று ரூபா 20, 000 பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டனர். 

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, கலைப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர். எஸ். ரகுராம், மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிர்வாக இயக்குனர் புபுது சுமணசேகர ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.  







No comments