ஹேக் செய்வதனை சுயமாக கற்று தேர்ந்த இளைஞன் ; மின் கட்டணத்தை செலுத்துவதாக 10 கோடி மோசடி!


மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கெசினோ விளையாட்டுகளுக்கு அதிக அடிமையாக இருந்த 24 வயதுடைய இளைஞர் கெசினோ கிளப்களுக்கு வருகை தரும் வர்த்தகர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இலட்சக்கணக்கான ரூபாய் மின்சாரக் கட்டண பட்டியல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கைப்பேசி செயலி மூலம் செலுத்தினால் 20% தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

சந்தேகநபரான இளைஞன் பணம் பெற்று மின்சார கட்டணத்தை இணையத்தின் ஊடாக செலுத்தியதாக உறுதிப்படுத்துவதற்காக இணையத்தின் ஊடாக மின்சார சபையின் கட்டணங்களை செலுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்துள்ளார்.

மின்சார சபையின் தரவுகளில் கட்டணம் செலுத்தப்பட்டதாக புதுப்பிக்கப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்தப்படுவதில்லை. அது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே குறித்த சந்தேக நபரை கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்ததாகவும், குறித்த நபர் இராணுவ விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை இணையதளங்களை ஹேக் செய்வது எப்படி என்பதை தானே சுயமாக கற்றுக்கொண்டதாகவும், தான் மோசடி செய்த பணத்தில் கெசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர். 


No comments