விவசாய குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நன்கொடை!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறை பெரும்போக நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் 20,000ரூபா வரை பண உதவியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கொடுப்பனவு மீள அறவிடப்பட மாட்டாது என்பதுடன் முற்றிலும் நன்கொடையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய ஒரு ஹெக்டயர் அல்லது அதனிலும் குறைவான நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான நெல் விவசாயிகளுக்கு 10,000 ரூபாவும் ஒரு ஹெக்டயரிலும் அதிக நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நெல் விவசாயிகளுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இப்பண உதவி வழங்கப்படவுள்ளதுடன் இவை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும்.

இம்முறை 08 இலட்சம் ஹெக்டயர் வயல் பரப்பில் பெரும்போகப் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கு அவசியமான MOP உரத்தை கொள்வனவு செய்வதற்காகவே விவசாயிகளுக்க இப்பண உதவி வழங்கப்படுகிறது.

இதற்காக 08 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன், நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்டுமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வெகு விரைவில் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

No comments