இங்கிலாந்துடன் ஆஸ்திரேலிய பாணியிலான அகதிகள் ஒப்பந்தம்: நிராகரிக்கும் கரீபியன் நாடான பெலிஸ்


இங்கிலாந்தால் நிராகரிக்கப்படும் புலம்பெயர்ந்தவர்களை எங்களது நாட்டுக்குள் ஏற்றுக்கொள்ளும் யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது என பெலிஸ் வெளியுறவுத்துறை மற்றும் குடிவரவுத்துறை அமைச்சர் Eamon Courtenay தெரிவித்திருக்கிறார். 

இங்கிலாந்து ஊடகமான தி டெய்லி எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, பிரான்சிலிருந்து இங்கிலாந்தில் படகு வழியாக தஞ்சமடையும் புலம்பெயர்ந்தவர்களை பராகுவே, பெரு, பெலிஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தங்களை உருவாக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டு வருகிறது.  

“புலம்பெயர்ந்தவர்களை உள்வாங்கி கொள்வதற்காக இங்கிலாந்து அல்லது வேறு யாருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை,” என பெலிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.   

“புலம்பெயர்ந்தவர்களை ஏற்றுமதி செய்யும் எண்ணம் எங்களுக்கு எதிரானது. அது நடக்கவே நடக்காது,” என்கிறார் பெலிஸ் நாட்டு அமைச்சர். 

ஹொண்டூராஸ், கவுதமாலா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுடன் எல்லையைக் கொண்டிருக்கும் பெலிஸ், 1981ம் ஆண்டு இங்கிலாந்தின் காலனிமயமாக்கலிலிருந்து விடுதலைப் பெற்றது. 

இன்றும் இங்கிலாந்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கும் பெலிஸ் காமன்வெல்த் கூட்டமைப்பின் அங்கமாகவும் உள்ளது. அத்துடன் ஆஸ்திரேலியாவைப் போலவே பெலிஸ் நாட்டின் அரசத் தலைவராக இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போல், பராகுவே நாட்டுடன் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதிச் செய்வதில் இங்கிலாந்து முன்னேற்றம் கண்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகத்தில் வெளியான செய்தியை பராகுவே தரப்பு மறுத்திருக்கிறது. 

இந்தாண்டு இங்கிலாந்தில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதை கடந்தாண்டு சூழலுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகமாகும்.  உட்சபட்சமாக  மூன்றே நாட்களில் 2,000 அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். 

ஏற்கனவே இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. ஆனால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தலையீட்டால் இங்கிலாந்திலிருந்து ருவாண்டாவுக்கு அகதிளை அனுப்பும் திட்டம் தடைப்பட்டது.  

படகு வழியாக தஞ்சமடையும் அகதிகளை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் செயலை முதன் முதலில் கடந்த 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு தொடங்கியது. படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயல்பவர்களை ஒருபோதும் எங்கள் நாட்டில் குடியமர்த்த மாட்டோம் எனச் சொல்லிய ஆஸ்திரேலிய அரசு, அகதிகளை அருகாமை தீவு நாடுகளான பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது. இதே பாணியிலான ஒப்பந்தத்தை ஏற்கனவே ருவாண்டாவுடன் கையெழுத்திட்டுள்ள இங்கிலாந்து அரசு, தொடர்ந்து மேலும் பல சிறிய நாடுகளுடன் ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்கான திட்டத்தை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   

No comments